நாட்டு மக்களுக்கு அயோடின் குளிகைகளை வழங்கும் அடுத்த நாடு ருமேனியா.
பின்லாந்து, பல்கேரியா, பெல்ஜியம் உட்பட மேலும் சில நாடுகள் போன்று ருமேனியாவும் தனது குடிமக்களுக்கு அயோடின் குளிகைகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கும் அந்தத் திட்டத்தின்படி நாட்டின் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அயோடின் குளிகைகள் வழங்க ருமேனியா தயாராகிறது.
திங்களன்று ருமேனியாவில் அரசாங்கம் ஆரம்பிக்கவிருக்கும் அறிவுறுத்தல் திட்டத்தில் அயோடின் குளிகைகளை எப்படிப் பாதுகாத்து, எந்தச் சமயத்தில் பாவிப்பது என்பது மக்களுக்குத் தெரிவிக்கப்படும். அப்படியான தாக்க்குதல் நடந்தால் அச்சமயத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்படும். உக்ரேனுடனான போரில் ரஷ்யா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என்ற திகில் பரவியிருப்பதே சில நாடுகளின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.
அணுகுண்டுத் தாக்குதல் நடக்கும் பட்சத்தில் சூழலில் பரவும் கதிரியக்கம் அதைச் சுவாசிப்பவர்களுக்கு தைரோய்ட் புற்று நோயை உண்டாக்கும். அதைக் கட்டுப்படுத்த அயோடின் குளிகைகள் பயன்படும் என்று குறிப்பிடப்படுகிறது.
உக்ரேனின் Zaporizhzhya அணுமின்சார நிலையம் மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து ரஷ்ய இராணுவத்தின் கைவசமிருக்கிறது. செர்னோபில் அணுமின்சார நிலையத்திலிருந்து ரஷ்ய இராணுவம் விலகிவிட்டது. அதை மீண்டும் தமது இயக்கத்தினுள் கொண்டுவரலாமா என்று உக்ரேன் அரசு சிந்தித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்