“எம்மால் ரஷ்யாவுக்குப் பதிலாக எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியாது,” என்கிறது நோர்வே.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்திவரும் ஐரோப்பிய நாடுகள் பதிலாக அதை நோர்வேயிடமிருந்து கொள்வனவு செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் நோர்வே அரசிடம் அந்த நாட்டின் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்டு வருகிறார். அதற்கான வசதி தம்மிடமில்லை, ஏற்கனவே முழுச்சக்தியுடன் எரிபொருள் தயாரிப்பு நடப்பதாக நோர்வேயின் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஐரோப்பாவுக்கான 20 விகித எரிவாயு, ஜேர்மனி, பிரான்ஸுக்குத் தேவையான 30 % எரிவாயு, ஐக்கிய ராச்சியத்துக்கான 40 % எரிவாயு ஆகியவற்றை நாம் ஏற்கனவே விற்பனை செய்கிறோம். எங்களுடைய எரிபொருள் தயாரிப்பால் எத்தனை முடியுமோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்,” என்று குறிப்பிடும் பிரதமர் ஜோனார் கார் ஸ்டூரெ ஐரோப்பா வேகமாக சூழலை மாசுபடுத்தாத சக்தியைத் தயாரிப்பதை நோக்கி நகரவேண்டும் என்கிறார்.
காற்றாடிகள், ஹைதரஜின், சூரிய சக்தி போன்றவைகளால் வரும் எரிசக்தியைப் பெருமளவில் தயாரிப்பது அவசியம். காலநிலை மாற்றத்துக்கு அணை போடுதலுக்கும் மிக அவசியமான அந்தக் குறிக்கோளை நோக்கிச் செயற்படுவதில் நோர்வே ஐரோப்பிய நாடுகளுடன் தோளுக்குத் தோள் கொடுத்துச் செயற்படும் என்று நோர்வேயின் பிரதமர் உறுதி கூறுகிறார்.
அதேசமயம் வெளியேறும் நச்சுக்காற்றை மீண்டும் கைப்பற்றி வெவ்வேறு வழிகளில் வளிமண்டலத்திலிருந்து அகற்றுதலும் அவசியம் என்று குறிப்பிடும் காரெ அப்படியான நடவடிக்கைகளே ரஷ்யாவை மீண்டும் எரிபொருளுக்காக நாடவேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும் என்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்