பெரும்பாலான ரஷ்யர்கள் புத்தினுடைய போருக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ரஷ்யாவின் அரசின் ஆதரவின்றித் தனியாக இயங்கும் லெவாடா அமைப்பு [Levada Center] நடத்திய கருத்துக் கணிப்பீட்டின்படி ரஷ்யர்களில் பெரும்பாலானோர் தமது ஜனாதிபதி உக்ரேனில் நடத்தும் போரை ஆதரிக்கிறார்கள். புத்தினுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடையே நாட்டின் வயதானவர்கள் பெரும்பான்மையாக இருப்பதாக அந்த அமைப்பு தனது கருத்துக் கணிப்பீட்டின் விபரங்களில் குறிப்பிடுகிறது.

மொஸ்கோவிலும் மற்றைய மாநகரங்களிலும் மட்டுமே புத்தினுக்கான ஆதரவு ஓரளவு குறைவாக இருக்கிறது. 14 % மட்டுமே புத்தின் உக்ரேனில் நடத்தும் போரை எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 25 – 39 வயதுள்ளவர்களாகும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட லெவாடா கருத்துக் கணிப்பீட்டின்பதி பெப்ரவரி மாதத்தின் பின்னர் புத்தினின் ஆட்சி மீதான ஆதரவும் அதிகரித்திருக்கிறது. 71 % விகிதமாக இருந்த ஆதரவு 83 % ஆக அதிகரித்திருக்கிறது.

புத்தின் உக்ரேனுக்குள் நடத்தும் போரின் காரணம் “ரஷ்ய மொழி பேசுகிறவர்களுக்கான பாதுகாப்பு” என்றே அப்போருக்கான ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். 51 % ரஷ்யர்கள் ரஷ்யர் என்பதால் பெருமையடைவதாகக் குறிப்பிடுகிறார்கள். 31 % பேர் தாம் கவலையும் பயமும் அடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.  

மற்றைய நாடுகள் எதனால் ரஷ்யாவை விமர்சிக்கிறார்கள் என்பது பற்றிய வினாவுக்கு மூன்றிலொரு பங்கு ரஷ்யர்கள், “நாட்டோவும், அமெரிக்காவும் உலகின் மற்றைய நாடுகள் எப்படி நடக்கவேண்டும் என்று கட்டுப்பாடு போட விரும்புவதாகவும்” அதேயளவு பேர் “மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தமது கொள்வனவாளர்களுக்குப் பொய்களைச் சொல்லி ஏமாற்றுவதாகவும்,” குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *