ஜேர்மனி வாழ் ரஷ்யர்கள் தம்மை வெறுக்காதிருக்கும்படி கேட்டு நடத்திய ஊர்வலங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகமான புலம்பெயர்ந்த ரஷ்யர்கள் வாழும் நாடு ஜேர்மனி. உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நடத்திய ரஷ்யாவின் நடவடிக்கையால் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்கள் மீதும் சாமான்ய ஜேர்மன் மக்கள் சில இடங்களில் தமது வெறுப்பைக் காட்டிவருகிறார்கள்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 383 குற்றங்கள் ஜேர்மனியில் வாழும் ரஷ்ய வெறுப்பைக் காட்டுவதாகவும், 181 உக்ரேனிய வெறுப்பைக் காட்டுவதாகவும் பொலீசாரால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதே நிலைமையே ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டிருக்கிறது.
ஜேர்மனில் வாழும் ரஷ்யர்கள் தமது சமூகம் மீது வெறுப்புணர்வைக் காட்டாதீர்கள் என்று சுட்டிக்காட்ட நாடெங்கும் வாகன ஊர்வலங்கள் நடத்தினார்கள். அவைகளில் ரஷ்யக் கொடிகளை அவர்கள் வாகனங்களில் கட்டியிருந்தன. பேர்லினைச் சேர்ந்த கிரிஸ்டியன் பிரையர் என்பவர் அந்த நகரில் சுமார் 400 வாகனங்களைக் கொண்ட பேரணியை ஒழுங்குசெய்திருந்தார்.
ரஷ்ய சமூகத்தின் மீது வெறுப்புக் காட்டாதீர்கள் என்று சொல்ல முறொஅட்ட ரஷ்யக் கொடிகளுடனான வாகனப் பேரணி ரஷ்ய இராணுவத்துக்கு ஆதரவானது என்று பலராலும் கருதப்பட்டது. அதில் ஒரு பெண் ரஷ்ய இராணுவத்தை ஆதரிக்கும் “Z” கொடியை வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். [அந்தச் சின்னம் பெர்லினில் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.]
ஊர்வலத்தை ஒழுங்கு செய்த கிரிஸ்டியன் பிரையர் மீது பலர் வெறுப்பையும், மிரட்டல்களையும் காட்டி வருகிறார்கள். அவர் ஒழுங்கு செய்தது போன்ற “ரஷ்ய சமூகத்தின் மீது வெறுப்புக்காட்டாதீர்கள்,” ஊர்வலங்களில் பங்குபற்றுகிறவர்களில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு செய்பவர்களும் பங்குகொள்கிறார்கள், சமயத்தைப் பயன்படுத்தி ரஷ்ய ஆதரவைக் காட்டுகிறார்கள் என்றும் பொலீசார் குறிப்பிடுகிறார்கள்.
இதுவரை இப்படியான ஊர்வலங்கள் அமைதியாக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே பெரும்பாலும் நடந்து வருகின்றன. ஆனாலும், போர் தொடர்ந்து நடக்குமானால் ரஷ்ய – உக்ரேன் போர் ஜேர்மனிய சமூகத்தினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்தலாம், அதை ரஷ்யாவின் ஆதரவாளர்கள் தமது மோசமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று ஜேர்மனியப் பொலீசார் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்