நாலு நாட்கள் என்றறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களைத் தாண்டித் தொடரும் ஷங்காய் பொதுமுடக்கம்.

கொவிட் தொற்றுடன் ஒரு நபர் கூட இருக்கலாகாது என்ற அசையாத நிலைப்பாட்டுடன் தொடர்கிறது சீனாவின் பொதுமுடக்கம் நாட்டின் பல நகர்களில். நாட்டின் அதிமுக்கிய வர்த்தக மையமான ஷங்காயில் தொடரும் பொதுமுடக்கம் சர்வதேசர் ரீதியில் பெரும் கவனத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு நாடுகள் பலவும் வெவ்வேறு துறைகளில் முதலீடுகள் செய்திருக்கும் ஷங்காயின் என்று முடியுமென்று தெரியாத பொது முடக்கங்களைப் பற்றிச் சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியமும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. 

26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது. – வெற்றிநடை (vetrinadai.com)

ஷங்காய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நான்கு நாட்கள் பொதுமுடக்கம் நடாத்தப்பட்டு பெரிமளவில் நகரப்பிரிவுகளில் கொவிட் 19 பரிசோதனை நடாத்தப்படும் என்பதே திடீரென்று வெளியாகிய செய்தியாகும். அதன்படி ஆரம்பித்த பொதுமுடக்கமும் பரிசோதனைகளும் இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக முழு ஷங்காயிலும் தொடர்கின்றன. தினசரி 20,000 பேருக்கும் அதிகமானோர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

நகரின் மிகப்பெரிய திறந்தவெளிக் கண்காட்சிக் கட்டடங்கள் உட்பட நகரெங்கும் பல தற்காலிகக் கூடாரங்களும் எழுப்பப்பட்டுத் தனிமைப்படுத்தல் மையங்களாக்கப்பட்டிருக்கின்றன. அங்கே 160,000 பேர் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகச் சீனச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

தனிமைப்படுத்தப்படுகிறவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் எவ்விதக் கொரோனாத்தொற்று வெளியடையாளங்களோ, சுகவீனமோ இல்லாதவர்களாகும். எவருக்காவது கொரோனாத்தொற்று இருந்துவிட்டாலே அவர்கள் பொதுத்தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அங்கே ஒரே வாரத்தில் இரண்டு தடவை தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து வெளியேறலாம்.

ஒழுங்கான முன்னறிவுப்பில்லாத பொதுமுடக்கத்தால் பலரும் உணவுக்கே தட்டுப்பாடான நிலையை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஷங்காய் மக்கள் தமது சமூகவலைத்தளங்களில் பதிந்து அதிகாரிகளை விமர்சிப்பதையும் பல ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. எவரும் வெளியேற அனுமதியில்லாத நிலையில் இரண்டு செயலிகள் மூலம் மட்டுமே தமது அன்றாடத் தேவைக்கானவற்றை அவர்கள் பதிவு செய்யலாம். ஆனால், அந்தச் செயலிகள் ஒரே நேரத்தில் பல மில்லியன் பேரால் பாவிக்கப்படுவதால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. தேவையென்று பதிவுசெய்யப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியாவது கிடைப்பதே அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்கள் அந்நகர மக்கள்.

பொது முடக்கங்களும், பெருமளவிலான பரிசோதனைகளும், தனிமைப்படுத்தல்களும் சமீப நாட்களில் நிற்கப்போவதில்லை என்றே தெரியவருகிறது. கொரோனாக் கிருமி ஒன்று கூட இருக்கலாகாது என்று போர் தொடுத்திருக்கும் சீனாவின் தலைமை அந்தக் குறிக்கோளே தொடரும் என்று சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அடிக்கோடிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *