ஆஸ்ரேலியாவில் மே 21 ம் திகதி பொதுத்தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்ரேலியாவில் ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருக்கும் பழமைவாதக் கட்சியின் தலைவர் ஸ்கொட் மொரிசன் வரவிருக்கும் மே 21 ம் திகதி நாட்டில் பொதுத்தேர்தலை நடத்தவிருப்பதாக ஞாயிறன்று அறிவித்தார். சர்வதேச நிலபரங்களைச் சுட்டிக்காட்டித் தேர்தலை அறிவித்த அவர் “பொருளாதாரத் தளம்பல்களை நாடு எதிர்நோக்கும் இந்தச் சமயத்தில் அனுபவமில்லாத தலைவர்களிடம் வாக்காளர்கள் நாட்டை ஆளவிடக்கூடாது,” என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் புதிய தலைவர் அந்தோனி அல்பனீசைச் சங்கேதமாகக் குறிப்பிட்டார்.
சமீப வருடங்களில் நாட்டின் நீண்டகால ஆளும் கட்சிகளின் தலைவர்கள் பற்றிய விரும்பத்தகாத விபரங்கள் வெளியாகி மக்களுக்கு அக்கட்சிகள் மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது. சமீப வருடங்களில் ஆஸ்ரேலியா எதிர்கொண்ட காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட சேதங்கள் சுற்றுப்புற சூழல் பற்றிய நிலைப்பாடுகள் மக்களின் தெரிவுகளில் எதிரொலிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் சமீப மாதங்களில் நாட்டில் எகிறியிருக்கும் விலைவாசிகளும் மக்களை அரசியல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் தெரியவரும்.
நீண்டகாலமாகப் பதவியிலிருக்கும் பழமைவாதக் கட்சி தற்போதைய கணிப்பீடுகளில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விடக் கணிசமான அளவு குறைவான ஆதரவையே பெற்று வருகிறது. கடந்த தேர்தலிலும் இதே நிலையிலிருந்த பழமைவாதக் கட்சி தேர்தல் நெருங்க நெருங்கத் தனது பலத்தை அதிகப்படுத்தி வெற்றிபெற்றது.
சாள்ஸ் ஜெ. போமன்