தென்னாபிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் மீது நடாத்தப்படும் அராஜகத்தைக் கண்டிக்கும் ஜனாதிபதி.
சமீப காலத்தில் தென்னாபிரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களைக் கண்காணிப்பு நடத்துவதாகக் குறிப்பிடும் குழுக்கள் தம்மிஷ்டப்படி நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அராஜகக் குழுக்கள் தென்னாபிரிக்கர் அல்லாதவர்களைத் தாக்கியும், வழிப்பறி செய்தும், வீடுகளுக்குள் நுழைந்து களவெடுத்தும் வருகின்றன.
யோஹான்னஸ்பெர்க்கின் புற நகரங்களில் இப்படியான குற்றங்கள் மலிந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சிரில் ரம்போசா கடுமையாகச் சாடியிருக்கிறார். இந்த நாட்டவர் அல்ல என்ற காரணத்துக்காக மட்டுமே வெறித்தனமாக மற்றவர்களைத் தாக்குவதைத் தென்னாபிரிக்க அரசு பொறுக்காது என்றும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
“வெளிநாட்டவர்களை வழிமறித்து அடையாள அட்டைகளைக் காட்டும்படியும், எந்த நாட்டுக் குடியுரிமையுள்ளவர்கள் என்று நிரூபிக்கும்படியும் கூறித் தென்னாபிரிக்காவில் வாழ உரிமையுள்ளவர்களா என்று பரிசீலிக்கும் சட்டத்துக்கெதிரான தனியார் குழுக்கள் பற்றிய செய்திகள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன,” என்று ரமபோசா தனது செய்திக் குறிப்பில் வெளியிட்டிருக்கிறார். அவர்களின் நடவடிக்கைகள் நிறவாதிகள் தென்னாபிரிக்காவை ஆண்ட காலத்தில் கறுப்பினத்தவர் மீது காண்பிக்கப்பட்ட கொடூரங்களுக்கு இணையானது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸிம்பாவ்வே, மொசாம்பி, பாகிஸ்தான், நைஜீரியா நாட்டவர்கள் அராஜகக் குழுக்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னாபிரிக்காவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவைகளுக்கு அங்கே வேலைதேடி வரும் வறிய நாட்டுக்காரரே காரணம் என்ற எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. நாட்டின் 35 % வயது வந்தவர்கள் வேலையில்லாமலிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்