ஒட்டுக்கேட்கும் கருவிகள் கொண்ட கோப்பையை இஸ்ராயேல் அரச அதிகாரிகளுக்கு சீனா கொடுத்ததா?
சீனத் தூதுவராலயத்தால் இஸ்ராயேல் அரச அதிகாரிகளுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட கோப்பைகளுக்குள் உளவு பார்க்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததா என்று இஸ்ராயேல் உளவு அமைப்பான ஷின் பெத் விசாரித்து வருகிறது. வெப்பநிலையை பேணும் கோப்பை ஒன்றுக்குள் ஒலிவாங்கிக் கருவி போன்ற ஒன்று பொருத்தப்பட்டிருப்பதை கண்டதாலேயே இந்தச் சந்தேகம் எழுந்திருப்பதாக ஷின் பெத் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
சுமார் 30 வருடங்களாக நட்புடன் இயங்கிவரும் நாடுகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்குடனேயே இந்த வதந்தி பரப்பப்பட்டிருப்பதாக சீனாவின் தூதுவராலயம் தனது பதிலில் தெரிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட அலுவலகர்களுக்கு வேறு பொருட்களுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் இருந்த அந்தக் கோப்பைகளைப் பரிசீலித்து வருகிறது ஷின் பெத். சமீபத்தில் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சி இஸ்ராயேலில் கற்றுவரும் மாணவர்களிடம் நாட்டில் பரவும் விடயங்களைச் சமூகவலைத்தளங்களில் கவனித்துச் சீன அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி கேட்டிருந்ததாக இஸ்ராயேல் குறிப்பிட்டிருந்தது.
வெளிநாடுகளில் கல்வி கற்றுவரும் சீனாவின் மாணவர்கள் பலர் உளவுக் கருவிகளை அந்தந்த நாடுகளுக்குக் கொண்டு சென்று சீனாவுக்காக விபரங்களைச் சேர்ப்பது பல நாடுகளிலும் சமீப வருடங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது
.
சாள்ஸ் ஜெ. போமன்