தப்பியோடி ரஷ்ய ஆதரவு உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக்கைப் பிடித்திருப்பதாக உக்ரேன் அறிவித்தது.
தனது மகளுக்கு புத்தினை ஆன்மீகத் தந்தையாகத் தெரிவுசெய்யும் அளவுக்கு புத்தினுடைய நெருங்கிய நண்பர் உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக். உக்ரேன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் உக்ரேனை ரஷியாவின் ஆதரவு நாடாக மாற்றுவதற்காகப் பல வழிகளிலும் செயற்பட்டு வந்தவர். நாட்டுக்குத் துரோகம், தீவிரவாதம் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காகக் கடந்த வருடத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த சமயத்தில் தப்பியோடியிருந்தார்.
புத்தின் உக்ரேனைக் கைப்பற்றியிருக்கும் பட்சத்தில் அங்கு தனது கையாள் ஒருவரைப் பிரதமராக நியமிக்க வேண்டியிருப்பின் மெட்வெட்சுக்கு அவ்விடம் அனேகமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
செவ்வாயன்று மாலையில் மெட்வெட்சுக் கைது செய்யப்பட்ட செய்தி படத்துடன் உக்ரேன் ஜனாதிபதியால் சமூகவலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டபோது அவர் தப்பியோடி 48 நாட்களாகியிருந்தன. உக்ரேன் இராணுவ உடையில் அவர் ஒளித்திருந்ததாகவும் உக்ரேன் உளவுப்படையினர் அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்ததாகவும் ஜனாதிபதி செலென்ஸ்கி எழுதியிருந்தார்.
கைது செய்யப்பட்ட மெட்வெட்சுக்கை ரஷ்யாவிடம் ஒப்படைந்துவிட்டு அவர்களிடமிருக்கும் உக்ரேன் போர்க்கைதிகளை விடுவிக்க விரும்புவதாக செலென்ஸ்கி குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்