ஜேர்மனியில் உள்நாட்டுக் கலவர நிலையை உண்டாக்கி அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டவர்கள் கைது.
ஜேர்மனியின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரைக் கடத்திச் செல்லவும் நாட்டின் நிறுவனங்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து ஒரு கலவர நிலையையும் உண்டாக்கத் திட்டமிட்டதற்காகப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். United Patriots என்ற பெயருடன் அக்குழுவினர் டெலிகிராம் என்ற தளத்தில் செயற்பட்டு வந்ததாகப் பொலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து நடத்தப்பட்டு வரும் கண்காணிப்புகள் விசாரணைகளின் அடிப்படையில் நாடெங்கும் 20 இடங்களில் சோதனைகள் நடாத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டிருப்பதாகப் பொலீசார் தெரிவித்தனர். மேலும் சிலர் மீது விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான ஜேர்மனியின் அரசியலமைப்பை ஏற்காத மேலுமொரு அமைப்புடன் சேர்ந்து குறிப்பிட்ட குழுவினர் ஜேர்மனியைச் செயலிழக்கச் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். தற்போதைய மக்கள் ஆரோக்கிய அமைச்சர் கார்ல் லௌத்தர்பக்கைக் கடத்தும் அதே நேரம் நாடெங்கும் இருட்டடிப்புச் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதன் மூலம் நாடெங்கும் நீண்டகாலக் கலவரம் போன்ற நிலையை உண்டாக்கிப் படிப்படியாக தற்போதைய ஜனநாயக அமைப்பைப் புரட்டுவது அவர்களுடைய திட்டமாக இருந்தது.
“நாங்கள் இப்போது கொரோனாத்தொற்றை விட மோசமான ஒரு நிலைமை உண்டாகிவிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் நாட்டில் மிகச் சிறிய அளவில் ஆங்காங்கே வெவ்வேறு குறிக்கோளுடன் செயற்படுகிறார்கள். மிகவும் ஆபத்தான வழிகளைக் கையாளக்கூடிய இவர்கள் நாட்டையே நிலைகுலையவைக்கலாம். வன்முறையைத் தீவிரமாகப் பாவிக்க இவர்கள் தயங்கப்போவதில்லை,” என்று மேற்கண்ட விசாரணைகள், கைதுகளைப் பொலீசார் செய்தபின் அமைச்சர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்