சுவீடனில் பகிரங்கமாகக் குரான் எரிக்கும் அரசியல்வாதி. அதை எதிர்த்து நாசம் விளைவிக்கும் கும்பல்.
கடந்த மூன்று நாட்களாகச் சுவீடனின் மூன்று நகரங்களில் பொலீசாரின் அனுமதியுடன் பகிரங்கள் மேடையில் குரானை எரித்து அதன் கோட்பாடுகள் மீது எதிர்ப்பைக் காட்டி வருகிறார் ராஸ்முஸ் பலுடான். அவர் டென்மார்க்கின் சிறிய அரசியல் கட்சியொன்றின் தலைவராகும். இஸ்லாம் எதிர்ப்பு, முஸ்லீம்களை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும், “கடுமையான வழி,” என்ற அக்கட்சிக்கு டென்மார்க் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தையும் வெல்ல முடிந்ததில்லை.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களிலும் பலுடான் சுவீடனின் தெற்கிலுள்ள வெவ்வேறு நகரங்களில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்று மேடையொன்றில் குரானைப் பகிரங்கமாக எரிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றிருந்தார். அவ்விடங்கள் முஸ்லீம்கள் செறிந்து வாழும் இடங்களாகவே தெரிவு செய்யப்பட்டிருந்தன.
சுமார் 20 பேர் பலுடானுடன் ஊர்வலம் சென்றனர். குரானை எதிர்ப்பதையெதிர்த்து நூற்றுக்கணக்கானோரைக்க் கொண்ட குழுவினர் அவர்களை எதிர்கொண்டு தாக்கினர். கலவரம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பொலீசாரையும் அந்தக் குழுவினர் தாக்கியதால் ஊர்வலங்கள் ஒவ்வொன்றிலும் பெரும் மோதல் ஏற்பட்டது. குரான் எதிர்ப்பை முறியடிக்க வந்தவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களுக்கு முகமூடிகளை அணிந்து வந்து ஏற்கனவே காத்திருந்ததாகப் பொலீசார் தெரிவித்தனர்.
பலுடான் ஊர்வலத்தை முறியடிக்க முற்பட்டவர்கள் கண்ணில் கண்ட பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். வழியிலிருந்த வாகனங்களைக் கல்லால் எறிந்து தாக்கியும் தீவைத்தும் வன்முறையைப் பிரயோகித்தனர். தீயை அணைக்க வந்த மீட்புப் படையினரும் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதால் தமது பணியைச் செய்ய முடியவில்லை.
முதல் இரண்டு நாட்களும் ஏற்பட்ட கலவரங்கள் சேதங்களையடுத்து சனியன்று பலுடானின் ஊர்வலத்துக்கான இடம் டென்மார்க் எல்லையை அடுத்துள்ள பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கேயும் பிற்பகலில் நூற்றுக்கணககானோர் குவிந்து பௌலாடன் ஆதரவாளர்களையும், பொலீசாரையும் தாக்கினர். பொலீசார் அக்கும்பலைக் கண்களை எரியவைக்கும் புகை மூலம் விரட்ட முற்பட்டனர். கற்கள், மொலடோவ் கொக்டெய்ல் ஆகியவையால் அக்கும்பல் பொலிசாரைத் தாக்கியது. சனிக்கிழமை மாலை பௌலாடன் தனது நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் சென்ற பின்னரும் அப்பகுதியில் கலவரங்கள், தீவைப்புக்கள் இரவில் தொடர்ந்ததாகப் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களும் நடைபெற்ற மேற்கண்ட கலவரங்கள் சுவீடன் அரசியல்வாதிகளிடையே வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகளில் பெருமளவில் ஆயுதங்களைப் பாவிக்காமல் இயங்கும் பொலீசார் கலவரங்கள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளைப் பாதுகாக்கத் தமக்கு வேறு பாதுகாப்புகளும் வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் அனுமதியுடன் நடக்கும் நிகழ்ச்சிகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றில் வன்முறையைப் பாவிப்பது அனுமதிக்கப்படலாகாது என்று அரசியல் தலைவர்கள் பலரும் பொலீசாரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்