புத்தினைச் சந்தித்த ஆஸ்திரியப் பிரதமர் தனது சந்திப்பைப் பற்றி வெளியிட்டார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரேயொரு தலைவர் மட்டுமே புத்தினை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அது ஆஸ்திரியத் தலைவரான கார்ல் நெஹம்மர் ஆகும். தனது சந்திப்பு நட்புறவு கொண்டாட அல்ல, தான் நேரடியாகக் கண்டதைப் புத்தினுக்கு நேருக்கு நேர் சொல்லவே என்று அவர் தன் சந்திப்புப் பற்றி வானொலிப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
“புத்தின் போர் பற்றித் தனக்கான கற்பனையில் வாழ்கிறார். அவர் ரஷ்யா போரில் வெற்றி பெறுவதாகவே குறிப்பிடுகிறார். இந்தப் போர் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அவசியம் என்றும் டொம்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேன் அரசு ரஷ்யர்களை அழிப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்,” என்று புத்தினைச் சந்திக்கு முன்னர் புச்யா நகருக்குச் சென்று ரஷ்ய இராணுவம் அங்கே பெற்ற இழப்புக்களையும் உக்ரேனின் சாதாரண மக்கள் அங்கே எப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று நேரே கண்ட கார்ல் நேஹம்மர் குறிப்பிட்டார்.
தனது சந்திப்பில் தான் எந்தவித மறைப்புமின்றி ரஷ்யாவின் போர்க் குற்றங்களையும், ரஷ்ய இராணுவத்தின் இழப்புக்களையும் பற்றித் தெரிவித்ததாகவும் அவர் பேட்டியில் தெரிவித்தார். உக்ரேனில் ரஷ்ய இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களை சர்வதேசம் தைரியமாக வெளியிடுவது தொடரவேண்டும் என்று அவர் கருதுகிறார்.
“எமது சந்திப்பின் இறுதியில் புத்தின்,’போர் இழுபறியாவதை விட வேகமாக முடிவதே நல்லது,’ என்று ஜேர்மன் மொழியில் குறிப்பிட்டார். எனவே, அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் அறியத் தொடங்கியிருக்கிறார். நாம் அவரது கண்களுக்குள் நோக்கி நடப்பதைச் சொல்லவேண்டியது அவசியம்,” என்றார் கார்ல் நேஹம்மர்.
சாள்ஸ் ஜெ. போமன்