தெற்கு எல்லையில் குவியும் அகதிகள் வரவிருக்கும் அமெரிக்க மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை நிர்ணயிப்பார்களா?
உக்ரேன் போர் அங்கிருந்து வெளியேறும் அகதிகள் பற்றிய சர்வதேசப் பிரச்சினைகளில் கவனம் செலுத்திவரும் ஜோ பைடன் அரசு விரைவில் பல மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கிறது. டெமொகிரடிக் கட்சியின் செனட் சபையின் பெரும்பான்மையை நிர்ணயிக்கவிருக்கின்றன அத்தேர்தல்கள். உள்நாட்டுப் பிரச்சினைகளை ஜோ பைடன் அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை வைத்தே வாக்காளர்கள் அத்தேர்தல்களில் வாக்களிப்பார்கள். அவைகளில் ஒரு முக்கிய கேள்வியாக இருப்பது நாட்டின் தெற்கு எல்லையில் குவிந்துவரும் அகதிகளை ஜோ பைடன் அரசு எப்படிக் கையாள்கிறது என்பதாகும்.
ஜோ பைடன் அரசு பதவியேறியதிலிருந்தே மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் எல்லையில் குவியும் அகதிகள் தொகை அதிகரித்தபடியே இருக்கிறது. அவர்களில் பலரை நாட்டுக்குள் விடாமலே திருப்பியனுப்புகிறது அமெரிக்கா. அதற்காக டொனால்ட் டிரம்ப் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாத்தொற்றுக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குறிப்பிட்ட சட்டமானது, “நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்காகச் சட்டபூர்வமாக அகதியாக விண்ணப்பிக்கிறவர்களையும் திருப்பியனுப்பலாம்,” என்கிறது. அச்சட்டமானது வரும் மே 23 ம் திகதி காலாவதியாகிறது. அதை மீண்டும் புதுப்பிக்காமலிருக்க முடிவுசெய்திருக்கிறது ஜோ பைடன் அரசு.
அச்சட்டம் நீக்கப்படுமானால் மீண்டும் அமெரிக்காவுக்கு உள்ளே வருபவர்களைக் கட்டுப்பாடின்றி நுழைய அனுமதிக்கவேண்டும், அவர்களுக்கு ஒழுங்கான வாழ்க்கை வசதிகளைச் செய்யவோ ஜோ பைடன் அரசு எதுவும் செய்யவில்லை. டெமொகிரடிக் கட்சிக்குள் ஒரு பகுதியினர் அக்குற்றச்சாட்டை முன்வைத்து நிலமை மேலும் மோசமடையும் என்று தமது அரசை விமர்சிக்கிறார்கள்.
அகதிகள் கட்டுப்பாடின்றி உள்ளே நுழைவதும் அதனால் ஏற்படும் ஒழுங்கீனங்கள், குற்றங்கள் ரிபப்ளிகன் கட்சியினருக்குத் தேர்தலில் ஆதரவாக மாறும் என்கிறார்கள் ஜோ பைடன் அரசை அவ்விடயத்தில் எதிர்ப்பவர்கள். இன்னொரு சாராரோ, டிரம்ப் கொண்டுவந்த அந்தச் சட்டம் மனிதாபிமானமற்றது, அது நீக்கப்படுவது நல்லது என்கிறார்கள்.
வரவிருக்கும் செனட் சபைப் பிரதிநிதிகள் தேர்தலில் அகதிகள் பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்பட்டுத் தமக்கு மீண்டும் வெற்றிக்குச் சாதகமில்லாமல் போகுமென்ற பயம் டெமொகிரடிக் கட்சியினரிடையே அதிகரிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்