பெல்கிரேட் – ரஷ்யா விமானங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உக்ரேன் புரளி கிளப்பியதா?
ஐரோப்பிய நாடுகளனைத்தும் ரஷ்யாவுடனான விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை முறித்துக்கொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கையைச் செய்யாத நாடுகள் துருக்கியும், செர்பியாவும் மட்டுமே. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததிலிருந்து பெல்கிரேடிலிருந்து ரஷ்ய நகரங்களுக்குப் பறக்கும் விமானங்களில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல்கள் விடப்படுகின்றன. அதனால் பல தடவைகள் பெல்கிரேடிலிருந்து பறந்த விமானங்கள் மீண்டும் கீழிறங்கிப் பரிசோதனை நடத்தவேண்டிவந்திருக்கிறது.
குண்டு மிரட்டல்களை வெளியிடுவது உக்ரேனின் உளவுத் துறையம் இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாடுமே என்று செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் குற்றம் சாட்டினார். ஆதாரங்கள் எவற்றையும் முன்வைக்காமல் வுசிச்சும் செர்பிய அதிகாரிகள் சிலர் உக்ரேன், போலந்து ஆகிய நாடுகளிலிருந்தே குண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டதை உக்ரேனிய வெளிவிவகார அமைச்சு மறுத்திருக்கிறது.
செர்பிய விமானங்கள் ரஷ்யாவுக்குப் பறப்பதால் அந்த விமான நிறுவனம் நட்டம் அடைவதாக செர்பிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆயினும், அவற்றைத் தொடர்வது தமது நாட்டின் கோட்பாட்டுக்கு முக்கியம் என்று ஜனாதிபதி வுசிச் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவின் போரைக் கண்டிக்கும் தீர்மானத்தைச் செர்பியா ஆதரித்தது. ஆனால், தாம் உலக அரசியலில் அணிசாராத நாடு என்று குறிப்பிட்டு ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளையும், முடக்கங்களையும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரேன் வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாளர் ஒலெக் நிகொலென்கோ செர்பியாவின் நிலைப்பாடு தமக்கு அதிருப்தியைத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்