ரஷ்யாவின் போரை எதிர்க்கும் சுமார் இரண்டு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த படித்தவர்களும், துறைசார்ந்த விற்பன்னர்களும் நாட்டை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டிருப்பதாகவும், தொடர்ந்து வெளியேறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை சுமார் 200,000 பேர் வெளியேறியிருப்பதாகவும் அவர்களில் சுமார் 13,000 பேர் இஸ்ராயேலுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ரஷ்ய அரசு தனது பிரசாரங்களின் மூலம் நாட்டின் படித்தவர்களை ஏளனம் செய்து அவர்களின் போர் எதிர்ப்பை இழுவுசெய்து “துரோகிகள்” என்று பழித்து நாட்டை விட்டு வெளியேறத் தூண்டுவதாக வெளியேறியவர்கள் பலர் சாட்சியமளித்திருக்கிறார்கள். இஸ்ராயேல் யூதர்களாக இருக்கும் பட்சத்தில் எவரையும் நாட்டுக்குள் வரவேற்கிறது. உயர்கல்வி கற்றவர்கள், கலைஞர்கள் போன்றோர் எனப்படும் குறிப்பிட்ட 13,000 பேரை விடக் குறைவாகவே யூதர் அல்லாத உக்ரேன் அகதிகள் அங்கே புலம்பெயர்ந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
கணனிகள், இணையத்தளங்கள் ஆகிய துறைகளில் விற்பன்னர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை ரஷ்யா தடை செய்திருப்பதாகவும் வெளியேறியவர்கள் குறிப்பிடுகிறார்கள். வெளியேறும் எல்லைகளில் நடாத்தப்படும் விசாரணைகளின்போது அத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரத்தியேகமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். பல நாடுகளிலும் ரஷ்யர்கள் வரவேற்கப்படுவதில்லை. அந்த நிலை மாறுமானால் இன்னும் பல லட்சம் பேர் நாடைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்று அங்கிருந்து களவாகப் புலம்பெயர்ந்தவர்கள் சாட்சியமளிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்