இஸ்ராயேல் சுதந்திர தின விமானப் பறத்தல் கண்காட்சியிலிருந்து விலகின எமிரேட்ஸ் நிறுவனங்கள்.
ஜெருசலேம் கோவில் பிராந்தியத்தில் பெரிய வெள்ளி, பாஸ்கா பண்டிகை வாரத்தில் உண்டாகியிருக்கும் கலவரங்களின் எதிரொலி இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவிலும் கரிய நிழலாக விழ ஆரம்பித்திருக்கிறது. ஜெருசலேம் கோவில் வளாகம், புராதன நகரப் பகுதிகளில் இஸ்ராயேல் நடந்துகொள்ளும் விதத்தை எமிரேட்ஸ் விரும்பவில்லை. அதன் ஒரு நடவடிக்கையாக மே 4 ம் திகதி நடக்கவிருக்கும் இஸ்ராயேல் சுதந்திர தின விழாவின் விமானச் சாகச நிகழ்ச்சியிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் விலகிவிட்டதாக அறிவித்திருக்கின்றன.
அபுதாபியிலிருக்கும் எமிரேட்ஸ் தூதுவரை நாட்டின் வெளிவிவகார அமைச்சு அழைத்து ஜெருசலேம் வன்முறைகளை இஸ்ராயேல் கையாளும் விதங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னரே ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சும் அங்கிருக்கும் இஸ்ராயேல் தூதுவரை வரவழைத்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது.
விஸ் எயார், எதிஹாட் எயர்லைன்ஸ் ஆகியவை இஸ்ராயேல் விமான நிறுவனங்களுடன் சேர்ந்து வானத்தில் பறந்து 2020 முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் நட்புறவைக் காட்டவிருந்தன. அவைகளிலிருந்து எமிரேட்ஸின் விமானிகளில் விலகிவிட்டிருப்பதாக இஸ்ராயேலுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் இஸ்ராயேல் வெளிவிவகார அமைச்சரையும், பாலஸ்தீனத் தலைவரையும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து ஜெருசலேமில் உண்டாகியிருக்கும் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவரும்படி கோரியிருக்கிறார். இரண்டு நாடுகள் தீர்வுக்கான வழியில் செல்ல அவர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் பிளிங்கன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்துக்கான அமெரிக்க அரசின் பிரத்தியேக பிரதிநிதி யேல் லம்பெர்ட் ஜோர்டான், இஸ்ராயேல், எகிப்து, பாலஸ்தீனப் பகுதி ஆகியவற்றுக்குச் செவ்வாயன்று முதல் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பித்திருக்கிறார். அவரது நோக்கமும் ஜெருசலேம் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர அந்த நாடுகளின் ஒத்துழைப்பைக் கோருவதற்கேயாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்