மேற்கு நாடுகளின் தடைகளுக்குள்ளான ரஷ்ய பில்லியனரொருவர் ரஷ்யாவின் போரைக் கடுமையாக விமர்சிக்கிறார்.
மேற்கு நாடுகளின் முடக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவரான ரஷ்யாவின் அதிபணக்காரர் ஒருவர் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். டிங்கொவ் வங்கி [Tinkoff Bank] என்ற வங்கியின் உரிமையாளரான ஒலெவ் டிங்கொவ் என்பவர் போர் தொடங்கிய நாளிலிருந்தே அதைச் சமூக வலைத்தளத்தின் மூலம் விமர்சித்து வந்திருக்கிறார். முதல் தடவையாக அவரது கடுமையான விமர்சனம் இன்ஸ்டகிராம் மூலம் வெளியாகிப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
“இந்தப் பைத்தியக்காரப் போரால் எந்த ஒரு நன்மையும் ஏற்படுவதை நான் காணவில்லை. ஒரு நாட்டின் அதிகாரம் முழுவதுமே அடிமைத்தனத்திலும், உறவுகளுக்காக அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதிலும் இயங்கும்போது அந்த நாட்டின் இராணுவம் மட்டும் எப்படி நற்காரியங்களில் ஈடுபடும்?” என்று தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். கிரெம்ளின் அதிகாரிகளெல்லாம் புத்தினின் கையாட்கள் போலச் செயற்படுகிறவர்க்ள் என்றும் அவர் சாடியிருக்கிறார்.
2006 ம் ஆண்டு டிங்கொவ் வங்கியை நிறுவி வெற்றிகரமாக இயக்கியதன் மூலம் பெரும் சொத்தைச் சம்பாதித்தவர் டிங்கொவ். அவரது வங்கி உலகின் இணையத்தள வங்கிகளில் முதலாவது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
“Z” என்ற எழுத்தை இராணுவ வாகனங்களில் எழுதியிருப்பதையும் அதைப் போருக்கு ஆதரவாக வியாபாரப்படுத்துவதையும் ஏளனம் செய்திருக்கிறார் லண்டனில் வாழும் டிங்கொவ். 90 % ரஷ்யர்கள் உக்ரேன் மீதான போரை எதிர்ப்பவர்களே என்று அவர் குறிப்பிடுகிறார். 5 பில்லியன் டொலர்களாக இருந்த அவரது சொத்துக்களின் பெறுமதி இரண்டே மாதத்தில் 800 மில்லியன் டொலராகச் சுருங்கிப் போயிருக்கிறது.
“எனது மேற்கு நாட்டு நண்பர்களே, புத்தின் இந்த முட்டாள்தனமான போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அவருக்கு ஏதாவது ஒரு வழியைத் திறந்து கொடுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்திருகிறார் டின்கொவ்.
சாள்ஸ் ஜெ. போமன்