வடக்கின் போர் – வென்றது சென் ஜோண்ஸ்
வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ் சென்ஜோண்ஸ் மற்றும் யாழ் மத்தியகல்லூரி அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் சென்ஜோண்ஸ் அணி வெற்றிவாகை சூடியது. வரலாற்றில் 115 ஆவது போட்டியாக இடம்பெற்ற இந்தப்போட்டியில் 99ஓட்டங்களால் இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் யாழ் சென்ஜோண்ஸ் அணி, 7விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை நிறுத்தி யாழ் மத்தியகல்லூரி அணியை இரண்டாம் இனிக்ஸ்க்காக துடுப்பெடுத்தாட அழைத்தது.
263 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்தியகல்லூரி ஆரம்பத்தில் மளமளவென இழந்த விக்கெட்டுக்களால் 164 ஓட்ட எண்ணிக்கையை மட்டுமே பெற்று 99 ஓட்டங்களால் தோல்வியுற்றது. இருப்பினும் யாழ் மத்திய கல்லூரியின் அமுதநாதன் ஜெரோரோஷன் (53 ஓட்டங்கள்) மற்றும் சிறிதரன் சாரங்கன் (33 ஓட்டங்கள்) ஆகிய இரு வீரர்களும் நின்று நிலைத்தாடி அணியை ஸ்திரப்படுத்தி ஆட்டத்தை வலுவாக்கியிருந்தனர்.
சென்ஜோண்ஸ் கல்லூரி அணியின் ஓட்ட எண்ணிக்கையில் கமலபாலன் சபேசன் அபாரமாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை குவித்திருந்தார்.
அதேபோல பந்துவீச்சிலும் சென்ஜோண்ஸ் கல்லூரியின் ஜெயசந்திரன் அஸ்நாத் 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.