ஏற்கனவே ஒரு மாதமாக முடக்கப்பட்டிருக்கும் ஷங்காயின் நிலைமை பீஜிங்கிலும் வருமா என்ற அச்சம் பரவுகிறது.
வுஹானில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கொவிட் 19 க்குப் பின்னர் சீனாவில் அப்பெருந்தொற்று மீண்டும் வேகமாகப் பரவி மக்களிடையே திகிலை உண்டாக்கி வருகிறது. நாட்டின் அதி முக்கிய வர்த்தக மாகாணமான ஷங்காய்க்கு அடுத்ததாக பீஜிங்கிலும் பரவல் எண்ணிக்கை அதிகமாவதால் அந்தப் பிராந்தியமும் முடக்கத்துக்கு உள்ளாகுமா என்ற பயத்தில் மக்கள் வார இறுதி முதல் கடைகளிலிருக்கும் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கிக் குவித்து வருவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பீஜிங் நகரம் ஒரு கடுமையான பொது முடக்கத்துக்குத் தயாராகி வருவதாக வதந்திகள் பரவிவருகின்றன. நகரின் பகுதிகள் பிரிக்கப்பட்டு பெருமளவில் கொவிட் 19 பரிசோதனைகள் நடத்துதல் ஆரம்பமாகியிருக்கிறது. ‘ஒரு தொற்றும் இருக்கப்படாது’ என்ற கோட்பாட்டில் கொரோனாத்தொற்றுக்களை எதிர்கொள்ளும் சீனாவின் கொள்கையால் அந்த நாட்டின் குடிமக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் கலங்குகிறது.
ஏற்கனவே கடந்த 2 வருடத்தின் பெரும்பகுதியில் சீனாவில் நடந்த பொது முடக்கங்கள் உலகெங்கும் தொழிற்சாலைகளுக்கான உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. தயாரிப்புப் பொருட்களின் சங்கிலியில் சீனாவின் தயாரிப்புக்கள் முக்கியமாக இருப்பதால் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு உலகெங்கும் ஏற்பட்டிருந்தது சமீப மாதங்களில் தான் சீராகி வருகிறது. அச்சமயத்தில் மீண்டும் சீனாவின் பெரும்பாகம் பொதுமுகக்கங்களுக்கு உள்ளாகினால் என்னாகும் என்ற திகில் உலகமெங்கும் எழுந்திருக்கிறது.
ஞாயிறன்றே பீஜிங்கில் பரவிவரும் பொதுமுடக்க வதந்தியால் ஆசியாவின் பங்குச்சந்தைகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் ஐரோப்பிய, அமெரிக்கப் பங்குச் சந்தைகளிலும் தொற்றியிருக்கின்றது. சீன அரசு முன்னறிவிப்பில்லாமலே பொது முடக்கத்தை அறிவிக்கக்கூடியது என்பதை அனுபவித்திருப்பதால் உலக வர்த்தகம் ஒரு கலவரமான நிலையைத் தொட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்