பிரான்ஸ் தேர்தலைப் போலன்றி ஸ்லோவேனியர்கள், ஆட்சியிலிருந்தவர்கள் தொடர்வதை விரும்பவில்லை.
கடந்த தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கி ஆட்சியை மக்ரோன் கைப்பற்றியது போல ஞாயிறன்று நடந்த ஸ்லோவானியாவின் தேர்தலில் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கட்டி பெருமளவு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ரொபெர்ட் கொலொப் என்பவர் ஆரம்பித்த சூழல் பேணும் கோட்பாட்டைக் கொண்ட “சுதந்திரக் கட்சி” 34.5 % விகித வாக்குகளைக் பெற்றது. ஆட்சியிலிருந்த ஜனெஸ் ஜன்சாவின் கட்சியால் 23.6 % ஆதரவையே பெற முடிந்தது.
பிரதமர் ஜனெஸ் ஜன்சா வலதுசாரித் தேசியவாதியாகும். அவரது ஆட்சி நீண்ட காலமாகவே மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, நாட்டைத் தனது அதிகாரத்துக்குள் முடக்கி வருவதாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஹங்கேரியப் பிரதமருக்கு இணையாக ஒப்பிடப்பட்ட அவர் நாட்டின் நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவற்றைத் அரசின் கைக்குள் அடக்கி இயக்கும் சட்டங்களை நிறைவேற்றி வந்திருந்தார். அதே வழியில் தொடர அனுமதி கேட்டுத் தேர்தலுக்குச் சென்ற அவரது ஆட்சியை 2.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்லோவேனிய மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.
55 வயதான ரொபெர்ட் கொலொப் அரசின் எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர். இதுவரை எந்தவித அரசியல் பின்னணியும், அதிகாரமும் இல்லாதவர். திடீரென்று ஆட்சிப் பொறுப்பைப் பெறுமளவுக்குச் சந்தர்ப்பம் பெற்றிருக்கும் அவர் கட்சி ஆட்சியில் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவமுள்ளவர்களையும் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாகியிருக்கிறது. அதிகாரத்தில் அனுபவமுள்ள நாட்டின் சோசியல் டெமொகிரடிக் கட்சியினர் 6.7 % வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கொலொப் ஆட்சியமைக்கலாம் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்