இணையத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுபட்டிருக்கிறது
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், அங்கத்துவ நாடுகளும் ஒன்றுசேர்ந்து இணையத்தளத்தின் மீது கொண்டுவரவிருக்கும் கட்டுப்பாடுகளும், எல்லைகளும் தயாராகியிருக்கின்றன. பொய்ச் செய்திகள், தீவிரவாதம் பரப்புதல், அனுமதிக்கப்படாத பொருட்களை விற்றல் ஆகியவைகளுக்குத் தடை போடுவதுடன் சிறாருக்கான விளம்பரங்களை நிறுத்துவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் 16 மணி நேர வாதப் பிரதிவாதங்கள், பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகளவிலும் இணையத்தள நிறுவனங்கள் பல விடயங்களில் பொறுப்பு எடுத்து மாற்றங்களைக் கொண்டுவர வழிவகுக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
இணையத்தளப் பாவனையாளர்களுக்குப் பாதுகாப்பையும் அமேஸான், கூகுள், பேஸ்புக் போன்ற பெரும் நிறுவனங்களின் மீது வரையறைகளையும் இந்தச் சட்டங்கள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலர்களின் ஆபாசப்படங்கள், போதைமருந்துகள் விற்றல், தீவிரவாதம் பரப்புதல், தனிமனிதர் மீது அவதூறு, மிரட்டல் போன்றவைகளை இணையத்தள நிறுவனங்கள் அதிவேகமாகத் தமது தளங்களிலிருந்து அகற்ற வேண்டும்.
தற்போது ஒரு தளத்துக்குப் போகும்போது அங்கே “நாம் உங்கள் இணையத்தள நடவடிக்கைகளைக் கவனித்து உங்களுக்கேற்ற விடயங்கள் பற்றிச் சொல்லச் சம்மதம் தாருங்கள்,” என்று கோரி அதைப் பாவனையாளர்கள் மறுக்க முடியாதபடி செய்கின்றன நிறுவனங்கள். அதையும் புதிய கட்டுப்பாடுகள் தடுக்கும். அதன் மூலம் இணையத்தள நிறுவனங்கள் பாவனையாளர் பற்றிய விபரங்களைச் சேகரிக்கின்றனவா, அவற்றை என்ன செய்கின்றன என்றும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
2023 ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 இன் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தச் சட்டங்களை மீறும் நிறுவனங்கள் மீது அதன் பெறுமதியின் 6 % வரையிலான தண்டம் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாவனையாளர்களை எட்டாதபடி செய்யலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்