சாதாரண நெல் உற்பத்தியை விட அதிக உற்பத்தியைக் கொடுக்கக் கூடிய உப்பு நீரில் வளரும் நெல்லைக் கண்டுபிடித்திருக்கிறது சீனா.
காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், தமது நாட்டு மக்களின் அடிப்படை உணவுத் தேவையைச் சுயபூர்த்திசெய்யவும் நீண்ட காலமாகவே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது சீனா. அவைகளில் முக்கிய நடவடிக்கைகளிலொன்றாக ஏக்கருக்கு 4.6 மெட்ரிக் தொன் விளைச்சல் செய்யக்கூடிய, உப்பு நீரில் வளரக்கக்கூடிய நெல் வகையைச் சீன விவசாய ஆராய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சீனாவின் வடக்கிலிருக்கும் ஷிங்ஹாய் மாகாணத்தில் இந்த ஆராய்ச்சி நடந்தேறி கடந்த மாரி காலத்தில் 100 ஹெக்டேரில் நெல் விளைச்சலைப் பெற்றிருப்பதாகச் சீனாவிலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. “கடல்நீர் நெல்” என்றழைக்கப்படும் இந்த ரகத்தை அதே பிராந்தியத்தில் தானாக வளரும் ஒரு நெல் ரகத்திலிருந்து மரபணுவை எடுத்து உருவாக்கியிருக்கார்கள். அதன் விளைச்சல் தேசிய அளவில் ஏக்கருக்கு மற்றைய நெல் ரகங்கள் கொடுக்கும் விளைச்சலை விட அதிகமானது என்கிறார்கல் விஞ்ஞானிகள்.
உலக மக்கள் தொகையில் ஐந்திலொரு பங்கைக் கொண்டிருக்கும் சீனாவின் விளைச்சல் நிலமோ உலகின் விளைச்சல் நிலப்பிராந்தியத்தின் பத்து விகிதம் மட்டுமே. எனவே, வழக்கமாக நெல் விளையாத சுண்ணாம்புத்தன்மையும், உப்புத்தன்மையுமுள்ள பகுதியில் விளையக் கூடிய தானியங்களைப் பரிசோதிப்பதில் 1950 லிருந்தே சீனா முயற்சி செய்து வருகிறது.
யுவான் லொங்பிங் என்ற விஞ்ஞானியின் முயற்சிகளே சீனாவுக்கு 1970 இல் அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் வகைகளைக் கொடுத்தது. 2016 இல் அவரது முயற்சியில் சீனாவின் வெவ்வேறு பாகங்களில், விளைச்சலுக்கு உகந்ததில்லை என்று கருதப்படும் தரிசு நிலங்கள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து உப்பு நீரிலும் விளையக்கூடிய நெல் வகையைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது. 6.7 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலத்தில் 30 மில்லியன் தொன் நெல்லைப் பயிரிடுவதே அவரது ஆராய்ச்சி நிலையத்தின் குறிக்கோளாக இருந்தது.
உப்பு நீரில் விளையக்கூடிய நெல் வகையைப் பயிரிடப் பாவிப்பதன் மூலம் நாட்டின் 100 மில்லியன் ஹெட்டேர் தரிசு நிலத்தை விளைச்சல் நிலமாக்கலாம், 80 மில்லியன் மக்களுக்குத் தேவையான நெல்லை விளைச்சல் செய்யலாம் என்கிறது சீனா. காலநிலை மாற்றங்களால் இழக்கப்பட்டு வரும் விளைச்சல் நிலங்கள், வளர்ந்து வரும் சனத்தொகை, அடிப்படை உணவில் தன்னிறைவு ஆகியவற்றை எட்ட இந்த உப்பு நீரில் விளையும் நெல்வகை உதவும் என்பது சீன விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்