டெஸ்லா நிறுவனம் பற்றிய பதிவுகளைட் டுவீட்ட எலொன் மஸ்க் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.
தனது நிறுவனமான டெஸ்லா பற்றி அதன் நிர்வாகி எலொன் மஸ்க் டுவீட்டும் பதிவுகள் முன்கூட்டியே அமெரிக்க பங்குச்சந்தை நிர்வாக அதிகாரத்திடம் அனுப்பி அனுமதி பெறவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதை எதிர்த்து எலொன் மஸ்க் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது.
பங்குச்சந்தை விற்பனைகளில் பங்குபற்றும் நிறுவனங்களின் உள்ளே நடப்பவற்றைப் பகிரங்கமாக பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும். டெஸ்லா நிறுவனத்தின் பெருமளவு பங்குகளைத் தன்னிடம் வைத்திருக்கும் எலொன் மஸ்க் அந்த நிறுவனம் பற்றிய விடயங்களைத் தன்னிஷ்டப்படி அவ்வப்போது டுவீட்டுவது உண்டு.
பல மில்லியன் பேரால் தொடரப்படும் மஸ்க்கின் டுவீட்டுகள் பல தடவைகள் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலைகள் ஏறவோ, இறங்கவோ செய்திருக்கின்றன. 2018 இல் அவர் அந்த நிறுவனத்தின் முதலீடுகள் பற்றி டுவீட்டிய விடயமொன்றால் பங்குவிலைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகின. அவர் வெளியிட்ட விடயம் உண்மையல்ல என்பதும் பின்னால் விசாரணையில் வெளியாகியது. அதனால் அதன் பங்குதாரர்கள் மஸ்க் வெளியிட்ட டுவீட் பங்குச்சந்தையில் அனாவசியமான குறுக்கீட்டை ஏற்படுத்தியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.
அதை விசாரித்த பங்குச்சந்தை அதிகாரம் மஸ்க் 20 மில்லியன் டொலர் அபராதம் கட்டவேண்டும், குறிப்பிட்ட முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டும், இனிமேல் நிறுவனத்தின் நிலை பற்றி வெளியிடும் பதிவுகளை முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருந்த எலொன் மஸ்க் தொடர்ந்தும் டெஸ்லா பற்றிய விடயங்களை டுவீட்டுவதானால் அதற்கான அனுமதியை முன்கூட்டியே பெறவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்