டுவிட்டரில் தனது தலைமையை விட்டிறங்கவேண்டுமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் எலோன் மஸ்க்.

சமூகவலைத்தளமான டுவிட்டர் தனது கையில் வந்ததும் அதிரடியாகப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முக்கியமாக அவர் அந்தச் சமூகவலைத்தளப் பாவனையாளர்களிடம் வாக்கெடுப்புகள் நடத்திச் சிலரின் கணக்குகளைத் திறந்திருக்கிறார். அவ்வழியில் நிறுவனத்தின் தலைமையிலிருந்து தான் விலகிக்கொள்ள வேண்டுமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்துகிறார்.

டொனால்ட் டிரம்ப் உட்பட மூடப்பட்ட சிலரின் கணக்குகளை டுவிட்டர் பாவனையாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தித் திறந்தார். திறந்த கணக்குகளில் ஒன்றான கெய்ன் வெஸ்ட் கணக்கை மீண்டும் மூடினார். யே என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பலதுறைக்கலைஞர் சமீபத்தில் யூதர்களை இழிவுசெய்யும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது அதற்குக் காரணமாக இருந்தது.

கடந்த வாரத்தில் எலோன் மஸ்க் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதிரடியாக மூடியதால் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளானார். எவ்விதக் காரணங்களையும் குறிப்பிடாமல் வாஷிங்டன் போஸ்ட், சி.என்.என் போன்ற சர்வதேச ஊடகப் பத்திரிகையாளர்களின் கணக்குகளை மஸ்க் மூடியதால் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க அரசும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தன. அதுபற்றியும் தனது டுவிட்டர் பாவனையாளர்களிடம் அவர் தேர்தல் நடத்தி அதன் முடிவுப்படியே கணக்குகளைத் திறந்துவிட்டார்.

தற்போது தனது தலைமை டுவிட்டரில் தொடரவேண்டுமா என்று அவர் கேட்டு நடத்தும் தேர்தலின் முடிவைத் தான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்று வாக்களித்திருக்கிறார். இதுவரை வாக்களித்தவர்களில் சுமார் 56 % பேர் அவர் விலகவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *