எதிர்ப்புக்குரல்களுக்கு மத்தியிலும் முதலாவது விமானம் பிரிட்டனிலிருந்து ஜூன் 14 இல் ருவாண்டாவுக்குப் பறக்கும்!
ஐக்கிய ராச்சியத்தினுள் அகதிகளாக வேண்டி கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழைபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி அங்கே வாழவைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட ஒப்பந்தம் அதற்காக ருவாண்டா அரசுடன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அகதிகளில் முதலாவது பகுதியை ஏற்றிக்கொண்டு ஜூன் 14 ம் திகதி விமானமொன்று பறக்கவிருக்கிறது.
இவ்வருடம் இதுவரையில் 4,850 பேர் கடல் மார்க்கமாக ஐக்கிய ராச்சியத்துக்குள் அனுமதியின்றி நுழைந்திருக்கிறார்கள். “மனிதக் கடத்தல்காரர்களின் கேவலமான வியாபாரம்,” என்று அதைக் குறிப்பிடும் ஐக்கிய ராச்சியத்தின் உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் அதை எதிர்கொள்ள நாட்டின் பதில் நகர்வு ருவாண்டாவுடனான ஒப்பந்தம் என்று தெரிவித்தார்.
அகதிகளாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் சமயத்தில் அகதிகள் ருவாண்டாவில் 5 வருடகாலம் வாழலாம். அவர்களுக்கான கல்வி, மருத்துவம், தங்குமிடம் போன்றவற்றை ஐக்கிய ராச்சிய அரசு வழங்கும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படால் அவர்கள் அங்கேயே தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். தனியராக வந்து அகதிகள் உரிமைக்கு விண்ணப்பித்திருப்பவர்களே முதல் விமானத்தில் அனுப்பப்படவிருக்கிறார்கள்.
“கொடூரமானது,” என்று மனித உரிமைக் குழுக்கலாம் விமர்சிக்கப்படும் அந்தத் திட்டத்தைப் பாதுகாப்பானது என்று வாதிடுகிறது போரிஸ் ஜோன்சனின் அரசு. ருவாண்டாவில் மனித உரிமைகள் பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு, “உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்று ருவாண்டா,” என்கிறார் ஜோன்சன்.
சாள்ஸ் ஜெ. போமன்