கொள்வனவாளர் சேவைகளில் தானே பதிலளிக்கும் இயந்திரங்களை நிறுத்தவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்.
எமக்குத் தேவையான சேவைக்காகவே அல்லது குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவோ நிறுவனமொன்றுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது அடுத்த பக்கத்தில் இயந்திரக் குரல் வெவ்வேறு மாற்றுக்களைச் சொல்லி மேலுமொரு இலக்கத்தைத் தரும் அல்லது நிமிடங்கள், மணி நேரங்களுக்குக் கூடக் காக்கவைக்கும். இந்த முறை இன்று பெரும்பாலான அதிகாரங்கள், நிறுவனங்களால் பாவிக்கப்படுவதால் பொதுமக்கள் அலுத்துப்போய் தமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளைக்கூடப் பெறமுடியாமலிருக்கிறது. இந்த நிலையை மாற்றத் திட்டமிட்டிருக்கிறது ஸ்பெய்ன் அரசு.
ஸ்பெய்னில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி அரசானது நாட்டின் கொள்வனவாளர் அமைப்பினால் உந்தப்பட்டு முன்வைத்திருக்கும் மசோதா ஒன்றின்படி ஒவ்வொரு நிறுவனமும் தமது தொலைபேசிச் சேவைகளில் உண்மையான நபரை அமர்த்தவேண்டும், தொடர்புகொள்பவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தினுள் பதிலளிக்கவேண்டும் போன்ற வரையறைகள் அறிமுகப்படுத்தப்படுத்தவிருக்கின்றன.
மக்களுக்கான அத்தியாவசியச் சேவைகளைக் கொடுக்கும் நிறுவனங்கள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் தொலைபேசிச் சேவை கொடுக்கவேண்டும். மற்றைய நிறுவனங்கள் வேலை நாட்களில் கட்டாயமாகத் தொலைபேசிச் சேவைகள் கொடுக்கவேண்டும். கொள்வனவாளர்களின் முறையீடுகளுக்கான பதில்கள் 15 நாட்களுக்குள் கொடுக்கப்படவேண்டும்.
“தற்போதைய நிலைமையில் இயந்திரத்தொலைபேசிச் சேவைகளினால் மக்களின் ஏகப்பட்ட நேரமும் சக்தியும் விரயமாகிறது, பலருக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதில்லை,” என்று மேற்கண்ட மாறுதல்களைக் கொண்டுவரவேண்டி மசோதாவை முன்வைத்திருக்கும் கொள்வனவாளர்கள் சேவை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்