பெண்கள் நிர்வாகக் குழுவில் இல்லாமல் நிறுவனங்கள் ஐரோப்பாவில் தடை செய்யப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிறுவனங்களின் உயர்மட்டத்திலும் கொண்டுவருவதற்காகப் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன. அவைகளில் எதுவும் இதுவரை எதிர்பார்த்த பலனைத் தராததால் “நிர்வாகக் குழுவில் பெண்கள் கட்டாயம்,” என்ற கட்டுப்பாடு ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளிலும் கொண்டுவரப்படவிருக்கிறது.
தற்போதைய நிலைமையில் நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் பிரான்ஸ் 45 % பெண்களைக் கொண்டிருக்கிறது. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டை ஏற்கனவே படிப்படையாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ். எஸ்த்லாந்திலோ 9 % பேரே நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள்.
“சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றியம் இதுபற்றிப் பேசி உற்சாகப்படுத்தி வந்திருக்கிறது. இனிமேல், நிறுவனங்களாக அந்த மாற்றத்தைக் கொண்டுவரும்வரை நாம் காத்திருக்க முடியாது. நிர்வாகப் பதவிகளை வெற்றிகரமாகக் கையாளக்கூடிய பெண்கள் பலர் உண்டு,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லேயன் குறிப்பிட்டார்.
2026 ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிறுவனங்கள் தமது நிர்வாகக் குழுவில் 40 % அங்கத்துவர்களைப் பெண்களாகத் தெரிவுசெய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறது புதிய சட்டம். அத்துடன் நிறுவனங்கள் தாம் புதிய ஊழியர்களைத் தெரிவுசெய்யும்போது நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களில் எந்தப் பாலார் குறைவானவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பெண்களின் நிர்வாகசபைப் பங்கெடுத்தல் சட்டத்தை நிறைவேற்றாத நிறுவனங்களைத் தண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்பவில்லை. அதை அந்தந்த அங்கத்துவ நாடுகளே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்