பெர்லினில் நேற்று நடந்தது வாகனத் தாக்குதல் மூலமான கொலை முயற்சியே என்கிறார் நகர ஆளுனர்.
ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. பாடசாலைப் பிள்ளைகளுடன் ஆசிரியர் நடந்துகொண்டிருந்தபோது நடந்த அந்தச் சம்பவத்தில் ஆசிரியர் இறந்தார். அது ஒரு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதலே என்று இன்று நகரின் ஆளுனர் உறுதிசெய்திருக்கிறார்.
பாதசாரிகள் பக்கத்தில் நடந்துகொண்டிருந்த பிள்ளைகளிடையே வாகனத்தை ஓட்டிய அந்த 29 வயது மனோவியாதியுள்ளவன் மேலும் 200 மீற்றர் தூரம் வாகனத்தை ஓட்டியதில் விற்பனைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் சாளரமொன்றுக்குள் வாகனம் நுழைந்தது. ஆசிரியர் இறந்ததுடன் 14 மாணவர்கள் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆர்மீனிய – ஜேர்மனியனான அவனது வாகனத்துக்குள் துருக்கியை எதிர்க்கும் கோஷங்கள் கொண்ட பலகைகள் இருந்தன என்று பொலீசார் தெரிவித்தனர். துருக்கியின் ஆர்மீனியக் கொலைகளுக்கு எதிராக அவன் இச்செயலைச் செய்திருக்கலாமா, என்ன நிலைமையில் அவன் இதைச் செய்தான் என்பவற்றைப் பொலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்