ஆஸ்ரேலியாவும், பிரான்ஸும் நீர்மூழ்கிக்கப்பல் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.
பிரான்ஸிடமிருந்து கொள்வனவு செய்துகொள்வதாக ஒப்புக்கொள்ளப்பட்ட நீர்மூழ்கிக்கப்பல்களை ஆஸ்ரேலியா வாங்க மறுத்திருந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திரப் பிளவுகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. ஒரு வருடமாக இதனால் இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த மனஸ்தாபத்தைச் சரிசெய்ய குறிப்பிட்ட பிரெஞ்ச் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு செய்ய ஆஸ்ரேலியாவின் புதிய பிரதமர் முன்வந்திருக்கிறார்.
ஆஸ்ரேலியாவின் முன்னாள் முதலமைச்சர் ஸ்கொட் மொரிசன் தனது நாடு ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி பிரான்ஸின் நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்கப்போவதில்லை என்று கடந்த வருடம் செப்டெம்பரில் அறிவித்தார். பதிலாகத் தாம் அமெரிக்காவிடமிருந்தோ, ஐக்கிய ராச்சியத்திடமிருந்தோ அணு ஆயுதம் தாங்கக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
சுமார் 35 பில்லியன் டொலர்கள் பெறுமதியான முறிவடைந்த அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாததுக்காகக் குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சுமார் 555 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்கப்படவிருக்கிறது. ஆஸ்ரேலியாவுடன் பிரான்ஸ் அன்று முறித்துக்கொண்ட உறவுகள் புதிய ஆட்சி ஆஸ்ரேலியாவுக்கு வந்த பின்னர் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
“எமது நாடுகளிடையே இருந்த மனக்கசப்புக்கள் இனிமேல் மறைந்துவிடும் என்று நம்புகிறேன். ஜனாதிபதி மக்ரோனின் அழைப்பை ஏற்று பாரிஸுக்கு விஜயம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,” என்று ஆஸ்ரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்