வட மக்கடோனிய – பல்கேரிய மனக்கசப்பை மாற்ற ஜேர்மனியப் பிரதமர் எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டு அதுபற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் காத்திருக்கின்றன வட மக்கடோனியாவும், அல்பானியாவும். ஆனால், அந்தக் கட்டத்துக்கு அந்த நாடுகளை நகரவிடாமல் ஒன்றியத்தில் அவர்கள் சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது பல்கேரியா.
சனிக்கிழமையன்று பல்கேரியாவுக்கும், வட மக்கடோனியாவுக்கும் விஜயம் செய்திருந்தார் ஜேர்மனியப் பிரதமர் ஒலொவ் ஷோல்ட்ஸ். இரண்டு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்கேரியா அதன் பின்னரும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
“பால்கன் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், ஒன்றிய நாடுகளில் ஒன்று வட மக்கடோனியா, அல்பானியா ஆகிய நாடுகளின் ஒன்றிய இணைவுக்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக இருந்து வருகிறது. அவ்விரண்டு நாடுகளும் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்துகொள்ள வேண்டியவை,” என்று ஷுல்ட்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டார்.
வட மக்கடோனியா தமது மொழிக்கான வேர் பல்கேரியாவின் மொழியே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், பல்கேரியாவை இழித்துப் பேசுவதை நிறுத்தவேண்டும், தமது நாட்டிலிருக்கும் பல்கேரியச் சிறுபான்மையினர் உரிமைகள்பற்றி அரசியல் சாசனத்தில் குறிப்பிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வட மக்கடோனியா நிறைவேற்ற வேண்டும் என்று பல்கேரியா விடாப்பிடியாகக் கோரி வருகிறது.
அவ்விரண்டு நாடுகள் தவிர செர்பியா, மொன்ரினீக்ரோ, துருக்கி ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்