உலகிலேயே அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படும் பாகிஸ்தான் பகுதிகள்.
என்றுமில்லாத அளவு அதிக வெப்பநிலையை ,மட்டுமன்றி, அந்தத் தீவிர வெப்பத் தாக்குதலானது முன்னரையும் விட வேகமாகவே பாகிஸ்தானின் பகுதிகளைத் தாக்கி வருகிறது. மனித உடலால் தாங்கக்கூடிய வெப்பநிலையில் அளவை அது சில இடங்களில் கடந்து விட்டிருக்கிறது. பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரமான கராச்சியை விட்டு நாட்டுப்புறமாகப் பயணிக்க ஆரம்பிக்கும்போதே வெப்ப நிலை 48 பாகை செல்சியஸைத் தாண்ட ஆரம்பிக்கிறது.
வடகிழக்குப் பாகிஸ்தானிலிருக்கும் சிந்த் பகுதியில் வெப்ப அலையின் தாக்கம் அதிதீவிரம் என்பதையும் கடந்து பலரைக் கொல்லவும் தொடங்கியிருக்கிறது. டாடு, யாக்கோப்பாடி, நவாப்ஷா பகுதிகளில் பல நாட்களாக வெப்ப நிலை 50 பாகை செல்சியஸைத் தொட்டு வருகிறது.
அந்தப் பகுதியில் தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய குடிநீர்க்குளம் மன்சார் இருக்கிறது. அக்குளம் அப்பகுதிகளிலிருக்கும் தொழிற்சாலைகளாலும், மக்களின் அசிங்கங்களைக் கொட்டுவதாலும் நச்சாகியிருக்கிறது. அதிலே ஒரேயொரு வகையான மீன் மட்டுமே தற்போது வாழ்கிறது. எனவே, குடி நீருக்காக அதைப் பாவிக்க முடியாததன்றி அப்பகுதியில் மீன் பிடித்தலில் தங்கியிருந்தவர்களுக்கும் அந்தக் குளம் பயன் தரமுடியாது.
ஓலையால் உண்டாக்கப்பட்ட குடிசைகளிலேயே மக்கள் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது அப்பகுதிகளுக்கு நகரிலிருந்து வியாபாரிகள் பனிக்கட்டியைக் கொண்டுவந்து விற்கிறார்கள். சமயத்தில் பொதுக் குளாய்களில் நீர் கிடைக்கிறது. எனவே, மக்கள் நச்சாகியிருந்தாலும் அந்தக் குளத்தைப் பாவிக்கிறார்கள். குழந்தைகளும் வெப்பநிலையைத் தவிர்க்க அக்குளத்தில் விளையாடி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்