உலகிலேயே மிக மந்தமான போக்குவரத்தைக் கொண்ட உலக நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று.
சிறீலங்காவை விட பங்களாதேஷ், நிக்காரகுவா ஆகிய நாடுகளில் மட்டுமே சராசரி போக்குவரத்து வேகம் மந்தமானதாக இருக்கிறது. சிறீலங்காவைப் போலவே மணிக்கு 50 கி.மீ வேகத்தில் போக்குவரத்து நகரும் இன்னொரு நாடு பொலீவியாவாகும். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி அறிக்கையில் போக்குவரத்து மந்தத்தனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவில் மணிக்கு 58 கி.மீ, பங்களாதேஷில் மணிக்கு 57 கி.மீ, மங்கோலியா மணிக்கு 56 கி.மீ, இந்தோனேசியா மணிக்கு 55 கி.மீ வேகத்தில் போக்குவரத்து நகர்கிறது. அவையும் போக்குவரத்து மந்தத்தனமாக இருக்கும் நாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
“வேகமாக ஒரு நாட்டின் வெவ்வேறு நகரங்களுக்கிடையே தொடர்புகள் இருப்பது நாட்டின் சகல பகுதிகளையும், மக்களையும் ஒன்றுசேர்க்கவும், நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்க உதவுகிறது. வேகமாகப் பயணிக்கக்கூடிய போக்குவரத்துத் தன்மை இருப்பது வெவ்வேறு பகுதிகளில் தயாரிக்கும் பொருட்களை வேகமாகச் சந்தைக்குக் கொண்டுவந்து நாட்டின் மொத்த வளர்ச்சிக்கு சக்தியூட்ட அவசியமாகிறது. அது நாட்டின் வறுமைத்தனத்தை ஒழிக்கவும் உதவுகிறது,” என்று குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிட்ட விபரங்களை கூகுள் செயலிகள் மூலம் ஒன்றிணைத்துப் பரிசீலித்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
அமெரிக்கா, போர்த்துக்கல், சவூதி அரேபியா, கனடா போன்ற நாடுகளிலேயே அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய வீதிகள் இருக்கின்றன. சுமார் 106 கி.மீ வேகத்தில் அந்த நாடுகளில் பயணிக்க முடிகிறது. பொதுவாகவே வளர்ந்த, சுபீட்சமான நாடுகளில் போக்குவரத்து வேகமும் அதிகமாக இருக்கின்றது.
சாள்ஸ் ஜெ. போமன்