பிரெஞ்சுப் பாராளுமன்றத் தேர்தலில் மக்ரோனின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை இழந்தது.
பலராலும் எச்சரிக்கப்பட்டது போலவே பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் அதிகார வரைபடத்தை மாற்றி வரைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற மக்ரோன் கட்சிக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் தமது அறுதிப் பெரும்பான்மையை இழந்திருக்கிறார்கள்.
அரசியல் கோட்பாடுகளில் மத்தியில் இருப்பதாகக் கருதப்படும் மக்ரோன் கட்சியினர் தமது எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள், வலதுசாரிகள் இருவரிடமுமே தமது ஆதரவை இழந்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே தமது வாக்குப் பலத்தை உபயோகிக்காமல் ஒதுங்கிக்கொண்ட வாக்காளர்கள் எண்ணிக்கையும் பெருமளவாக இருந்தது. வரவிருக்கும் ஐந்து வருடங்களில் மக்ரோன் அறிவித்திருந்த திட்டங்களை நிறைவேற்ற அவர்கள் பெரும் பாடுபட்டுப் பேரம் பேசவேண்டியிருக்கும் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
முதல் தடவையாகப் பிரெஞ்ச் அரசியலில் ஒன்றுபட்டுக் கூட்டணியமைத்துத் தேர்தல் களத்தில் இறங்கிய இடதுசாரிகள், சூழல் பேணும் அமைப்புக்களின் கூட்டணி நாட்டின் இரண்டாவது பலமான அரசியல் பாளமாக ஆகியிருக்கிறது. அது மட்டுமன்றி வலதுசாரித் தேசியவாதிகளின் கட்சியானது முதல் தடவையாக 80 க்கும் அதிகமான பாராளுமன்ற இடங்களைப் பெறலாம் என்று இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளிலிருந்து தெரியவருகிறது. அவர்கள் 2017 தேர்தலில் பெற்றதை விடப் பத்து மடங்கு அதிக ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.
“இது ஒரு ஜனநாயக அதிர்வு,” என்று பிரெஞ்ச் பொருளாதார அமைச்சரும், “இந்தத் தேர்தல் முடிவுகள் எமது நாடு எதிர்நோக்கியிருக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு மிகப் பெரும் சவாலாக அமைத்திருக்கிறது,” என்று பிரதமரும் தமது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலைமையைத் “தளம்பும் பாராளுமன்றம்,” எனலாம். அங்கே பாராளுமன்றத்தில் எடுக்கவிருக்கும் முடிவுகளுக்கு ஆளும் கட்சியான மக்ரோன் கட்சியினர் தமது எதிர்க்கட்சிகளிடையே ஆதரவு பெறவேண்டியிருக்கும்.
இந்த நிலைமையைக் குறிவைத்தே பிரெஞ்ச் இடதுசாரிகளும், சூழல் பேணும் ஆதரவாளர்கலும் ஓரணியில் இணைந்தனர். தேர்தல் முடிவுகளின் பின்னர் மக்ரோன் கட்சியினர் தன்னைப் புதிய பிரதமராக ஆக்கவேண்டியிருக்கும் அவர்களின் தலைவராக இருக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர் மெலன்சோன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்