பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

கொரோனா வைரஸ் உட்பட சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதற்கான பொதுவான ஒரு சட்டக் கட்டமைப்பை உருவாக்க வகைசெய்யும் சட்ட வரைவு ஒன்றுக்கு திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

“நீண்டகால சுகாதார நெருக்கடி மேலாண்மை ஆட்சி” (“régime pérenne de gestion des urgences sanitaires”)என்று அந்த சட்டவரைவுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

அந்த சட்ட வரைவின்படி தடுப்பூசி ஏற்றாத ஒருவர் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்த முடியாதபடி தடுக்கப்படலாம்.சில பொது இடங்களுக்குள் நடமாடவும் சில தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடுப்பூசி ஏற்றியிருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படலாம். அத்துடன் உணவகம் ஒன்றில் பணிபுரிபவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசி கடவுச்சீட்டை(vaccine passport) வைத்திருப்பது கட்டாயமாகலாம்.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருப்பதை அடுத்து அந்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளநிலையில் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வெடித்துக் கிளம்பி உள்ளன.

பிரான்ஸில் “பைசர் பயோஎன்ரெக்” கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் ஞாயிறன்று உத்துயோகபூர்வமாகத் தொடங்க இருக்கும் நிலையில் புதிய சுகாதாரச் சட்ட வரைவுக்கு எதிராக காரசாரமான கண்டனங்கள் வெளியாகி உள்ளன.

தீவிர வலதுசாரியான ஆர். என்.(RN party) கட்சியின் தலைவி மரீன் லுப்பென், அடிப்படையில் “இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளார்.

“நடமாடும் சுதந்திரத்துக்கு எதிரான பெரும் தாக்குதல் இது” என்று வலதுசாரி ரிப்பப்ளிக்கன் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பின் நோக்கம் அரசின் அதிகாரங்களைப் பலப்படுத்துவது அல்ல. மாறாக நெருக்கடிகால சுகாதார முகாமைத்துவ த்தை வலுப்படுத்துவதே அதன் இலக்கு என்று பொது நிர்வாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் நெருக்கடி மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதுபோன்ற பெரும் சுகாதாரப் பேரிடர்களைக் கையாளவதற்கு புதிய சட்ட அமைப்பு உதவும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரான்ஸில் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றுமாறு கடுமையாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட மாட்டாது என்று அதிபர் மக்ரோன் உறுதி அளித்திருப்பது தெரிந்ததே.

நாடளாவிய கருத்துக்கணிப்பு ஒன்றின்படி 55 சதவீதமான மக்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *