வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இது நடந்திருக்கிறது.
பிரதமர் காரியாலயத்தை அடுத்துள்ள வளாகத்திலிருந்து போராட்டக்காரர்கள் விலக ஆரம்பித்த பின்னரே இராணுவம் அதற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் தாம் அங்கிருந்து முற்றாக அகலவிருப்பதாகத் தெரிவித்த பின்னரே இராணுவம் அங்கே தடாலடியாகப் புகுந்து அப்பக்குதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. “GotaGoGama” போராட்டக்காரர்களின் தலைவர்கள் உட்பட சுமார் 100 பேர்களைக் கைதுசெய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
போராட்டக்காரர்களிடையே நுழைந்த இராணுவம் பலாத்காரத்தைப் பிரயோகித்ததாகப் பல சாட்சியங்கள் கூறுகின்றன. அங்கு தங்கித் தமது அதிருப்தியைத் தெரிவித்து வந்தவர்கள் பலர் தாக்கப்பட்டதாகவும் சுமார் 10 பேர் கடும் காயங்களுடன் மருத்துவ மனையை நாடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் நுழைவும், நடத்தைகளும் பலரால் நேரடியாகச் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்புச்செய்யப்பட்டன.
தான் பதவியேற்ற பின்னர் வெளியிட்ட உரையில் நாட்டில் சட்டமீறல் நடவடிக்கைகள் எதையும் தான் நடக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும், அரசின் காரியாலயங்களை, வளாகங்களைக் கைப்பற்றியிருப்பவர்களைத் தொடர்ந்தும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்