உக்ரேனின் ஒடெஸ்ஸா துறைமுகத்திலிருந்து முதலாவது தானியக் கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கியது.
ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் முன்னிலையில் உக்ரேன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உக்ரேனின் தானியக் கப்பல்களை கருங்கடல் மூலம் பயணிக்க அனுமதிக்கும் நடவடிக்கை திங்களன்று ஆரம்பமானது. சுமார் 26,000 தொன் சோளத்தை ஏற்றிக்கொண்டு முதலாவது கப்பல் இஸ்லான்புல்லை நோக்கிப் பயணமாகியது. ரசோனி என்ற இக்கப்பல் சியாரா லியோனேயின் கொடியுடன் பயணிக்கிறது.
துருக்கியின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தப்படி ரஷ்யா நடக்குமா என்ற சந்தேகங்கள் கடைசி நிமிடம் வரை இருந்தன. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நாடான உக்ரேன் பெப்ரவரியில் போர் ஆரம்பித்தது முதல் தனது கைவசமிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அதே சமயம் மேலுமொரு முக்கிய தானிய ஏற்றுமதி நாடான ரஷ்யாவின் ஏற்றுமதிகளுக்குப் போடப்பட்ட முடக்கங்களும் சேர்ந்து சர்வதேச ரீதியில் தானியத் தட்டுப்பாட்டையும் விலையுயர்வையும் உண்டாக்கியிருந்தன.
தானியக்கப்பல் லெபனானை நோக்கிச் செல்லவிருக்கிறது. அதற்கு முதல் இஸ்தான்புல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட ஐ.நா-அதிகாரிகள், ரஷ்யா, துருக்கி ஆகியோரின் ஒன்றிணைந்த குழுவால் பரிசீலிக்கப்படும். லெபனானுக்குச் சென்று தானியத்தை இறக்கிய பின்னர் திரும்பி வரும் வழியிலும் அது சோதனைக்கு உள்ளாக்கப்படும். அக்கப்பல்கள் ஆயுதங்களை ஏற்றி வரலாகாது என்பதை ரஷ்யா தீர்மானமாகக் கவனிக்கவெ இச்சோதனைகள் நடாத்தப்படுகின்றன.
கருங்கடலின் உக்ரேன் துறைமுகங்களில் 16 தானியச்சரக்குக் கப்பல்கள் சுமார் 600,000 தொன் தானியங்களுடன் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணமாகத் தயாராக இருக்கின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்து உக்ரேன் உலகின் மூன்றிலொரு கோதுமை ஏற்றுமதியைச் செய்யும் நாடுகளாக இருக்கின்றன. உக்ரேனின் போக்குவரத்துத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோ முதலாவது தானியக்கப்பலின் பயணத்தைப் பாராட்டி இதன் மூலம் உலகின் பசி பட்டிணியைக் குறைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்