கான்சாஸ் மாநில மக்கள் தொடர்ந்தும் கருக்கலைப்பு உரிமையைப் பேண வாக்களித்தார்கள்.
கோடை கால ஆரம்பத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் நாடெங்கும் இதுவரை அனுமதிக்கப்பட்ட கருக்கலைப்பு உரிமையைப் பறிக்க மாநிலங்கள் சட்டமியற்றலாம் என்று குறிப்பிட்டுத் தீர்ப்பளித்தது. விளைவாக அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ஒரு தனி மனித உரிமையா என்ற கேள்வி அரசியலில் ஒரு பெரும் சூறாவளியாக மாறியிருக்கிறது. அதன் ஒரு படியாகப் பழமைவாதிகளின் பிடியிலிருக்கும் கான்சாஸ் மாநிலத்தில் அதுபற்றிய பொது வாக்களிப்பு நடாத்தப்பட்டது.
கருக்கலைப்பு உரிமையைத் தனிமனிதர்களிடமிருந்து பறித்தெடுப்பதில் அமெரிக்காவின் கிறிஸ்தவ பழமைவாதிகளும், ரிபப்ளிகன் கட்சியினரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் பிடியிலிருக்கும் சில மாநிலங்கள் ஏற்கனவே கருக்கலைப்பைத் தடைசெய்யும் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அதேபோன்ற பெரும்பான்மையைக் கொண்ட மாநிலமான கான்சாஸ் மக்களோ தமது அரசியல்வாதிகளுடைய போக்குக்கு எதிராக வாக்களித்து அவர்களை அதிரவைத்திருக்கிறார்கள்.
கான்சாஸ் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பில் பங்குபற்றியதுமன்றி 60 % விகிதமான பெரும்பான்மையுடன் தொடர்ந்தும் கருக்கலைப்பை மாநிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறார்கள். விரைவில் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்குமான தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்கு கான்சாஸ் ஒரு முக்கிய செய்தியை அனுப்பியிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்