இடிமின்னல் தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்பு மையத்துத் தீவிபத்தை அணைக்க முடியாமல் தவிக்கும் கியூபா.
கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்கு வெளியே சுமார் 60 கி.மீ தூரத்திலிருக்கும் மெந்தாஸா நகர எரிபொருள் சேமிப்பு மையத்தில் கடந்த வெள்ளியன்று இடிமின்னல் தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட கடும் தீவிபத்தால் பலர் இறந்தும், காயமடைந்தும் இருக்கிறார்கள். தீயோ தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கிறது.
எரிபொருட்களைக் கொண்டிருக்கும் மூன்றாவது கொள்கலன் வெடித்துச் சிதறியிருக்கிறது. கியூபாவின் இராணுவ ஹெலிகொப்டர்கள் தீயணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. கட்டுபாட்டுக்கு இதுவரை வராத தீவிபத்தில் ஒருவர் இறந்து, 24 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். ஐவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 16 தீயணைப்புப் படையினர் இதுவரை காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கியூபாவின் தீயணைப்புப்படையினருக்கு உதவியாக மெக்ஸிகோ, வெனிசூவேலா நாட்டிலிருந்தும் உதவிப்படையினர் வந்திருப்பதாகக் கியூபா அரசு தெரிவித்திருக்கிறது. சுமார் 1,900 பேர் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் பிராந்தியத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
கியூபாவில் சில மாதங்களாகவே எரிபொருள் தட்டுப்பாடும் அதனால் மின்சாரத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் மின்சாரத் தயாரிப்பு, தொடர்புகள் பல வருடங்களாக நவீனப்படுத்தப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசு குறிப்பிடுகிறது. அதனால், இரண்டு மாதங்களாகவே நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சாரம், எரிபொருள் போன்றவையை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தினசரி 12 மணி நேரமே அந்த நகரங்களில் மின்சாரம் கிடைக்கிறது. அதன் விளைவாகப் பல நகரங்களில் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்