உலகின் அதிகூடிய வெப்பநிலையுள்ள நகரங்களாக மாறியிருக்கின்றன ஈராக்கில் பல நகரங்கள்.
வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமானதாக இருக்கும் நகரங்களாக பல உலக நகரங்கள் மாறியிருப்பது இந்தக் கோடைகாலத்தில் தினசரிச் செய்திகளாகி வந்திருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஈராக்கின் தெற்கிலுள்ள நகரங்களில் பல ஒரு வாரமாகத் தினசரி 50 பாகை செல்சியஸைத் தாண்டியிருக்கின்றன. பஸ்ரா நகரில் அது 53 பாகை செல்சியஸாக இருப்பதாகச் சாட்சியங்கள் குறிப்பிடுகின்றன.
சதாம் ஹுசேனின் ஆட்சி வீழ்த்தப்பட்டதையடுத்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற நிலைமையில் அரசாங்கம் முடமாகியிருக்கிறது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியினராலும் நாட்டில் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. நாட்டின் ஷீயா இஸ்லாமிய அரசியல் கட்சியினர் மற்றவர்களை விட அதிக இடங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அமைக்க முடியாத நிலைமையில் மற்றக் கட்சியினரை ஆட்சியமைக்காமல் நாடெங்கும் ஊர்வலங்களையும், எதிர்ப்புக்களையும் உண்டாக்கியிருப்பதால் வெப்ப அலையால் தாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளிலொன்றான மின்சாரமும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. பல நகரங்களில் தினசரி ஆறு மணி நேரம் கூட மின்சார வசதி கிடைப்பது பிரச்சினையாகியிருக்கிறது.
மிக அதிகமான அந்த வெப்பநிலையில் தூங்கவோ, வேலை செய்யவோ, எதையாவது சிந்திக்கவோ கூட முடிவதில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட நகரிலுள்ளவர்கள். கடந்த வாரம் ஈராக்கின் பத்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் வெப்பநிலை தாங்க முடியாததால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா-வின் ஆராய்ச்சி விபரங்களின்படி காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாகப்பாதிக்கப்படும் நாடுகளில் ஐந்தாவது இடத்திலிருக்கிறது ஈராக்.
அரசாங்கம் ஒன்று நிறுவப்படாத காரணத்தால் நாட்டில் வரவுசெலவுத்திட்டம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பெற்றோல் விலைகள் உச்சத்தைத் தொடும் சமீப காலத்தில் ஈராக் எரிபொருள் விற்பனையை அதிகரித்துக் கஜானாவுக்குப் பணம் கிடைத்தாலும் எந்த ஒரு அமைச்சும் வரவுசெலவுத் திட்டம் இல்லாத காரணத்தால் பணத்தை ஒதுக்கி நாட்டு மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான மின்சாரத் தயாரிப்பையும் ஏற்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்