சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.
ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது பதவிக்காலத்தை முழுசாக நிறைவேற்ற முடியாத முதலாவது ஜனாதிபதியான கோட்டாபாயாவின் அடுத்த நிறுத்துமிடம் தாய்லாந்து என்று சில செய்திகள் குறிப்பிடுகின்றன.
குட்டி நாடான சிங்கப்பூர் அங்கே விஜயம் செய்பவர்களுக்குப் பொதுவாக விசா வழங்குகிறது. எவருக்கும் அரசியல் தஞ்சம் கொடுப்பதில்லை என்றும் அவருக்கான எந்தப் பிரத்தியேக வசதியும் கொடுக்கப்படவில்லை என்ற கொள்கையே கோட்டாபாயா விடயத்தில் கைக்கொள்ளப்பட்டதாகச் சிங்கப்பூர் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இருந்துகொண்டே கோட்டாபாயா சிறீலங்கா பாராளுமன்ற சபாநாயகருக்குத் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்திருந்தார்.
கோட்டாபாயா சிங்கப்பூரிலிருந்து சிறீலங்காவுக்குத் திரும்புவார் என்று அவரது கட்சியினர் சிலர் மூலமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, அந்த எண்ணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். “முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்குத் திரும்புவதற்கு இந்தத் தருணம் சரியானதல்ல,” என்று அவர் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வியாழனன்று கோட்டாபாயா ராஜபக்சே தாய்லாந்து பயணமாவது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று சிறீலங்கா அரசு சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்