வரட்சியால் நீர்மட்டம் குறைந்திருக்கும் றேன் நதியால் ஐரோப்பியப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு.
இந்தக் கோடைகால வரட்சியால் றேன் நதியின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதனால், அந்த நதியில் பொருட்களைக் கொண்டுசெல்லும் கப்பல்கள் வழக்கத்தைவிட மூன்றிலொரு மடங்குப் பொருட்களையே காவிச்செல்ல முடிகிறது. நிலைமை ஐரோப்பியத் தொழிற்சாலைத் தயாரிப்புகளுக்குப் பங்கம் விளைவிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
இரசாயணப்பொருட்கள், வாகனங்களுக்கான அத்தியாவசிய மற்றும் உதிரிப்பாகங்கள், மின்சாரத் தயாரிப்புக்கான நிலக்கரி, இரும்புத் தொழிற்சாலைப் பொருட்கள் ஆகியவை நீர்ப்போக்குவரத்தையே நம்பியிருக்கின்றன.
நீர்மட்டம் சாதாரணமாகக் கோடைகளில் சுமார் 2 – 3 மீற்றராக இருப்பது வழக்கம். கடந்த பல வாரங்களின் வரட்சியான காலநிலையால் அது சுமார் 1 மீற்றர் வரையே இருக்கிறது. பொருட்களைக் காவிச்செல்லும் கப்பல்களின் உரிமையாளர்கள் தமது ஒவ்வொரு பயணங்களின் முன்னரும் நீர்மட்டத்தின் அளவை முதலில் அளந்த பின்னரே போக்குவரத்துக்குப் போகலாமா என்று முடிவுசெய்யும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக விசனத்துடன் தெரிவிக்கிறார்கள். அதனால், சில கப்பல் நிறுவனங்கள் தமது கப்பல் போக்குவரத்தை முழுசாகவோ பகுதியையோ நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
வருடாவருடம் 230 மில்லியன் தொன் பொருட்கள் றேன் நதி மூலமாக ஜேர்மனியின் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாகக் கொரோனாக்கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட போக்குவரத்து முடக்கங்களால் உண்டாகிய தட்டுப்பாடுகளைத் தீர்க்க இதுவரை முடியவில்லை. இந்த நிலையில் வரட்சியால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொழிற்சாலைகளின் தயாரிப்புக்களுக்கு மேலும் இக்கட்டாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்பட்டிருக்கும் வரட்சி தொடருமானால் ஜேர்மனியின் பொருளாதார உற்பத்தியானது மாதத்துக்கு 1 % ஆல் வீழ்ச்சியடையும் என்று பொருளாதார விற்பன்னர்கள் கணிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்