உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் கத்திக் குத்துக்கு உள்ளான சல்மான் ருஷ்டி.
படைப்பிலக்கியத்தில் சுதந்திரம் என்பதைப் பற்றிய நிகழ்ச்சியில் பங்கெடுக்க நியூயோர்க் நகர மேடையில் ஏறிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இளைஞனொருவன் கத்தியால் குத்திய விடயம் வெள்ளியன்று உலகை அதிரவைத்தது. உடனடியாக விமானத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிரபல எழுத்தாளரின் நிலைமை தொடர்ந்தும் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை அறிக்கை குறிப்பிடுகிறது.
75 வயதான ருஷ்டிக்குக் கழுத்திலும், வயிற்றிலும் கத்திக்குத்து விழுந்தது. பேச முடியாத நிலைமையில் இருக்கும் அவர் ஒரு கண்ணையும் இழக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தாக்குதல் நடத்தியவனைத் துரத்திப் பிடித்து விழுத்தினார்கள். ருஷ்டியை நேர்காணல் செய்யவிருந்தவரும் தாக்குதல்களுக்கு ஆளாகினார். சிகிச்சையின் பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
இந்தியப் பின்னணிகொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி 1989 லிருந்து உயிருக்கு எச்சரிக்கை பெற்ற நிலையிலேயே வாழ்கிறார். அவர் எழுதிய “சாத்தானின் வேதங்கள்,” என்ற படைப்பு இஸ்லாத்தின் தூதரான முஹம்மதுவைக் கேவலப்படுத்துவதாக முஸ்லீம்கள் பலரால் கருதப்படுகிறது. ஈரானின் ஆயத்துல்லா கொமேனி இஸ்லாத்தை இகழ்ந்த ருஷ்டியைக் கொல்லவேண்டுமென்று உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் [பத்வா] அறைகூவியிருந்தார். ஈரானிய இஸ்லாமிய மத அமைப்பொன்று ருஷ்டியைக் கொல்பவருக்கு 3 மில்லியன் எவ்ரோ சன்மானமாகக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
தன் மீது போடப்பட்டிருக்கும் பத்வாவால் உயிருக்கு ஆபத்து என்பதால் ருஷ்டி பல தசாப்தங்களாக ஒளித்தே வாழவேண்டியிருந்தது. 1990 களில் மட்டுமே அவர் சுமார் 30 இடங்களில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் பற்றி விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை. அந்த நிகழ்ச்சிகளுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
சமீப வருடங்களில் நியூயோர்க்கில் பகிரங்கமாகவே வாழ்ந்து வந்தார் சல்மான் ருஷ்டி. அதுவரை ஒளித்து வாழ்ந்தது போலத் தொடராமல் முடிந்தவரை சாதாரண வாழ்க்கையே அவர் வாழ்ந்து வந்தார். சமீப வருடங்களில் ஈரானிய அரசும் அவர் மீதான பத்வா பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமலிருந்தது.
புலம்பெயர்ந்து வாழ்வது பற்றிய படைப்புகளை எழுதிப் புகழ்பெற்றவர் சல்மான் ருஷ்டி. 1981 இல் வெளிவந்த அவரது இரண்டாவது நாவலான, “நள்ளிரவுக் குழந்தைகள்,” மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் “புக்கர்” பரிசையும் பெற்று அவரை உலகமெங்கும் பிரபலமாக்கியது. “சாத்தானின் வேதங்கள்” அவரது நாலாவது படைப்பாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்