அறியப்படாத காரணத்தால் ஓடர் நதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து போய் ஒதுங்கியிருக்கின்றன.
ஜேர்மனிக்கும், போலந்துக்கும் நடுவே ஓடும் நதிப்பிராந்தியத்தில் ஏகப்பட்ட மீன்கள் இறந்துபோய் ஒதுங்கியிருப்பது விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு நாடுகளிலிருந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மீன்களின் இறப்புக்கான காரணத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆராய்வுகளை ஆரம்பிக்கும்படி கோரப்படுகின்றன.
ஜேர்மனிய அதிகாரிகளுக்கு மீன்கள் இறப்பு பற்றித் தெரிவிக்கவில்லை என்று ஜேர்மனி போலந்தைக் குற்றஞ்சாட்டுகிறது. திட்டமிட்டுத் தெரிந்துகொண்டே எவரோ நஞ்சுக்களை நதிநீரில் கலந்துவிட்டிருப்பதாக ஜேர்மனி குறிப்பிடுகிறது. ஒரு வாரத்துக்கு முன்னரே போலந்தில் ஆங்காங்கே இறந்துபோன மீன்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. அவை ஏதாவது ஊர்களில் மட்டுமே என்று கருதி அதைப் பற்றிய தேவையான அளவு கவனமெடுக்கவில்லை என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் போலந்துப் பிரதமர்.
செச்னியாவிலிருந்து ஓடும் அந்த நதியானது பால்டிக் கடலில் சங்கமிக்கிறது. நதி ஓடும் பகுதிகளிலிருக்கும் தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ நச்சு இரசாயணத்தை நதியினுள் அனுமதித்திருக்கலாம் என்று சந்தேகம் உண்டாகியிருக்கிறது. ஐரோப்பாவில் வழக்கத்துக்கு மாறான வரட்சி ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் நதியில் கலக்கும் சிறிய அளவு நஞ்சுகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சூழல் ஆர்வலகர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஓடர் நதி ஓடும் பகுதியில் வாழ்பவர்கள் அந்த நதி நீருடன் தொடர்புகளைத் தவிர்க்கும்படி வேண்டிக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். நதியின் நீர் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற நீண்டகாலமாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்