ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் தாக்கப்படுகிறது ; மோல்டோவா அயோடின் மாத்திரைகளை வாங்குகிறது.
உக்ரேனின் பக்கத்து நாடான மோல்டோவா ஒரு மில்லியன் அயோடின் மாத்திரைகளைக் கொள்வனவு செய்திருக்கிறது. காரணம், உக்ரேனிலிருக்கும் Zaporizhzhia அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகளாகும். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமான அங்கே நடக்கும் தாக்குதலுக்கு ரஷ்யாவும், உக்ரேனும் காரணங்களை எதிர்தரப்பின்மீது சுட்டிக்காட்டி வருகின்றன.
Zaporizhzhia அணுசக்தி நிலையத்தில் ஆபத்து ஏற்படுமானால் அது ஐரோப்பா முழுவதையுமே தாக்கும் என்று ஐ.நா- உட்பட பல அமைப்புகளும், நாடுகளும் கடுமையாக எச்சரித்து வருகின்றன. அதன் மீது தாக்கவேண்டாமென்று ரஷ்யாவையும், உக்ரேனையும் வேண்டிக்கொள்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதியும் அதுபற்றிப் பேச ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
2.5 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான மோல்டோவா குறிப்பிட்ட அணுசக்தி நிலையத்திலிருந்து சுமார் 460 கி.மீ தூரத்திலிருக்கிறது. இன்னொரு எல்லையுடன் அமைந்திருக்கும் ருமேனியாவே மோல்டோவாவுக்கு ஒரு மில்லியன் அயோடின் குளிகைகளை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது. அணுசக்தியால் உடல் பாதுகாக்கப்படக்கூடிய சக்தியை அயோடின் கொடுப்பதாகக் கருதப்படுகிறது.
ருமேனியாவிலிருந்து பெறப்பட்ட அயோடின் குளிகைகள் நாட்டின் மருத்துவ மையங்களில் பாதுகாக்கப்பட்டுவரும். தற்போதைய நிலையில் எந்தவித ஆபத்தும் இல்லையென்று கூறும் மோல்டோவா அரசு மக்களைக் கலவரமடையாமலிருக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறது. ஆபத்தான ஒரு கண்டம் ஏற்படுமானால் அவை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவற்றை எப்படிப் பாவிக்கவேண்டும் என்று விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் மோல்டோவா தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்