மதவழிபாடு குற்றமானது என்று தடைசெய்யப்பட்ட நிக்காராகுவாவில் மக்கள் திருப்பலியில் பங்குபற்றினர்.
லத்தீன் அமெரிக்க நாடான நிக்காராகுவாவில் சமீப வாரங்களில் நாட்டின் மத நம்பிக்கையுள்ளவர்கள் மீதான கெடுபிடிச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி டேனியல் ஒர்ட்டேகாவின் அரசை விமர்சனம் செய்துவந்த கத்தோலிக்க குருவானவர் ஒருவர் மீது விசாரணைகளை நடத்த உத்தரவிட்டது அரசு. அத்துடன் மதவழிபாடுகளும் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ஒர்ட்டேகாவின் மதவழிபாட்டுத் தடையையும் மீறி நாட்டின் தலைநகரான மனாகுவாவில் சனிக்கிழமையொன்று நடந்த திருப்பலியில் பெரும் கூட்டமாகக் கத்தோலிக்கர்கள் பங்குபற்றினர். கத்தோலிக்க திருச்சபையின் அதிமேற்றாணிமார் நகரத்தின் பொலீசாரால் தடை செய்யப்பட்ட அந்தத் திருப்பலியில் பங்கெடுக்கும்படி விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இந்தத் திருப்பலியில் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்குபற்றும் நான் எங்களுடைய பல திருச்சபைப் பங்குகளில் உண்டாகியிருக்கும் நிலைமையைக் கேட்டு வேதனையடைகிறேன். எங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை மன்னியும் தேவனே, அவர்கள் தெரிந்துகொண்டே இதைச் செய்கிறார்கள்,” என்று அதிமேற்றாணியார் லியபோல்டோ பிரெனேஸ் குறிப்பிட்டார்.
இம்மாத ஆரம்பத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்டு வந்த ஆறு வானொலி நிலையங்களை ஒர்ட்டேகாவின் அரசு மூடிவிட்டது. மேற்றிராணியார் ரொலாண்டோ அல்வாரஸ் மீது, வன்முறை, வெறுப்பு ஆகியவற்றைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டி அவரையும் மற்றும் சில பாதிரியார்களையும் இரண்டு வாரங்களாகத் தேவாலய வளாகமொன்றில் தடுத்துவைத்து விசாரணை செய்தனர் பொலீசார்.
வெள்ளியன்று கத்தோலிக்க திருச்சபையின் அமெரிக்காவுக்கான பாதுகாவலர் அமெரிக்கக் கண்டத்தின் 27 நாடுகளின் கத்தோலிக்க திருச்சபைகளின் பிரதிநிதிகளையும் கூட்டி நிக்காராகுவாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பற்றி விவாதித்தனர். அதன் பின்னர் வத்திக்கானின் சார்பில், நிக்காராகுவாவின் மத நம்பிக்கையாளர் மீது நடந்துவரும் அநீதிகள் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2018 இல் பதவிக்கு வந்த ஒர்ட்டேகாவின் அரசு அதன் பின்னர் நாட்டின் ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க்கட்சிகளையும் தன்னாலியன்றவரை முடக்கி வருகிறது. கடந்த வருடம் நடந்த தேர்தலுக்கு முன்னர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை எதிர்கொள்ள “வெளிநாடுகளின் சதிக்கு உதவுபவர்கள்” என்று குறிப்பிட்டு அடக்கி வருகிறது அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்