ஆஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் எவருக்கும் தெரியாமல் தனக்குத்தானே பல மந்திரிப்பதவிகளை எடுத்துக்கொண்டார்.
ஆஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இரகசியமாகத் தனக்குத்தானே மந்திரிப் பதவிகளை எடுத்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அவர் பிரதமர் பதவி தவிர மேலும் ஐந்து அமைச்சுக்களின் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தன் மீது குற்றஞ்சாட்டுகிறவர்களுக்குத் தனது பதவி பற்றிய உண்மையான விபரங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் மொரிசன்.
“பிரதமர் என்ற முறையில் எனது தோள்களில் இருக்கும் பொறுப்புக்களை என்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்,” என்று தன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கிறார் அவர். கொரோனாத்தொற்றுக் காலத்தில் மக்களின் பாதுகாப்புக்காக, தான் பல முடிவுகளை அவசரமாக எடுக்கவேண்டிய நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
இவ்வார ஆரம்பத்தில் மொரிசன் எவருக்கும் தெரியாமல் மூன்று அமைச்சர் பதவிகளை எடுத்துக்கொண்ட விபரங்கள் வெளியாயின. அச்சமயத்தில் வேறு அமைச்சர் பதவிகளையும் அவர் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கான பதிலை அவர் வெளியிடவில்லை. ஆஸ்ரேலியாவின் தேசிய ஆளுனர் டேவிட் ஹேர்லி மூலம் மொரிசன் குறிப்பிட்ட அமைச்சர் பதவிகளை எடுத்துக்கொண்டது வெளியானது. அவ்விபரங்களை மொரிசன் வெளியிடாமல் இரகசியமாக வைத்துக்கொள்வாரென்பது தனக்குத் தெரியாது என்கிறார் ஆளுனர்.
உள்துறை, வர்த்தக, வர்த்தகச்சந்தை, இயற்கைவளம், ஆரோக்கியத்துறை ஆகியவற்றில் மொரிசன் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டதாகத் தெரியவந்திருக்கிறது. மொரிசனின் அமைச்சரவையில் அப்பொறுப்புக்களில் இருந்த மூன்று அமைச்சர்களுக்கு, தாம் அப்பொறுப்புக்களைப் பிரதமருடன் பகிர்ந்துகொண்டது பற்றித் தெரியாது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகப் பாரம்பரியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளாகும். அவர் தனது சொந்த அமைச்சரவைச் சகாக்களையே நம்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே,” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்.
மொரிசன் தனக்குத்தானே இரகசியமாக அமைச்சர் பதவிகளைக் கொடுத்துக்கொண்டதன் மூலம் சட்டங்களை மீறியிருக்கிறாரா என்பது பற்றி அறிந்துகொள்ள ஒரு குழுவை நியமித்திருப்பதாக அல்பனீஸ் தெரிவித்தார்.
யாராவது அமைச்சர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகினால் அந்த அமைச்சின் பொறுப்பையும் எடுப்பதற்குரிய அதிகாரங்களையும் மொரிசன் எடுத்துக்கொண்டு அவற்றை அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதை வெளிப்படுத்தினால் அவைகள் பற்றிய தவறான கருத்துக்கள் வெளியாகலா, அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதால் அவற்றைத் தான் வெளியிடவில்லை என்கிறார் மொரிசன்.
தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அங்கத்துவராக இருக்கும் மொரிசன் பற்றிய விபரங்கள் வெளியாகியதால் அவரை அப்பதவியை விட்டு விலகும்படி பலர் கோருகிறார்கள். அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்களே தமது முதுகுக்குப் பின்னால் மொரிசன் செயற்பட்டதால் கோபமடைந்திருக்கிறார்கள். ஆனால் மொரிசன் பாராளுமன்றத்திலிருந்து விலகினால் அவரது தவறுகளுக்காக அவரைத் தண்டிக்கமுடியாது என்பதால் தொடர்ந்தும் அவரைப் பதவியிலிருக்கும்படி ஒரு சாரார் கேட்டிருக்கிறார்கள். மொரிசனும் அதை ஒத்துக்கொண்டு தொடர்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்