நீர்த்துளிகளின் பயணம் | கவிநடை
மேகமாக விரைவுப்பயணத்தில், பலமுறை பூமி சுற்றிய அந்த மேகம்,
பழுத்து… மழையாய் பெய்வதற்கு தயாராக இருந்த த்தருணம் ……
ஏன்…இப்படி மௌனமாக நிற்கிறோம்…..
மெல்ல கேட்டது ஓர்நீர்த்துளி…
ஆமாம்….மழையாகத் தயாரானப்பிறகும் கடந்த சில மணி நேரங்களாக, போட்டுவைத்த பொதி மூட்டையைப்போல அந்த மேகத்திரள் அப்படியே நிற்கிறது…….
நீராவியாய் உடல் சுருங்கி கிடந்த நீர் மூலக்கூறுகள், நீர் திவலைகளாக மாற்றம் பெற்று விட்டன……
தாங்கள் எங்கு செல்லப்போகிறோம் என்பதுகூட நீர்த்துளிகளுக்குத் தெரிந்துவிட்டது……
சும்மா நிற்கும் நேரத்தில் தங்கள் பயண இலக்கு பற்றி நீர்த்துளிகள் தங்கள் ‘சக உதிரி’களுக்குள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தன…..
“நான்…கடல் நீரோடு கலக்கப் போகிறேன்…..””
என்றது ஓர் துளி
“சபாஷ்….”
என்றன மற்றவை….
“நான் வானவில்லை உருவாக்கப் போகிறேன்” என்றது மற்றொன்று….
“அருமை” என்றன பிற….
“நான் நிலத்தடி நீர் என்றது ஒன்று….
நானும் நானும்” என்றன பல…..
கரகோஷம் போட்டன மற்றவை..
நான் முத்து ஆகப்போகின்றேன் என்றது ஒன்று…..
கைதட்டல் ….
நான் ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி என்றது ஒன்று….
முடிந்தவரை ஆனந்தக்கண்ணீராக மாறு என்றது ஒன்று….
நான் விந்து திரவம் என்றது ஓர் மழைத்துளி…
அந்த மானுடனை, நிறைய மரங்களை நடச்செய் என்றன பிற…..
நான் அருவித் துளி…
நான் ஆற்றுச்சுழல்…
நான் ஆலவிதை
நான் பூவிதழ் பனி நீர்….
மகிழ்ச்சி மகிழ்ச்சி
உயிரினங்கள் வாழ உதவியாக இருக்கும் நம் பயணம் ஆரம்பம்…
என்றொரு பேரதிர்வு ,பழுத்த மேகத்தை உடைக்க… பேரானந்தமாய் நீர் துளிகள் மழையாய், ஆர்பரித்து மண்நோக்கி வர ..
மழை ஆரம்பமாயிற்று..
எழுதுவது : தர்ஷிணிமாயா, தமிழ்நாடு