போர்த்துக்கீச அரசனின் இருதயம் பிரேசிலின் சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக விமானத்தில் பயணமானது.
செப்டெம்பர் ஏழாம் திகதி பிரேசில் தனது 200 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. அதில் பங்கெடுப்பதற்காக அந்த நாட்டின் முதலாவது பேரரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போர்த்துக்கீச அரசனான டொம் பெத்ரோவின் இருதயம் போர்த்துக்காலிலிருந்து பிரேசிலுக்கு விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. அதை பிரேசிலின் ஜனாதிபதி பொல்சனாரோ உத்தியோகபூர்வமான சடங்குகளுடன் ஜனாதிபதி மாளிகையில் பெற்றுக்கொண்டார்.
போர்த்துக்கீசக் காலனியாக இருந்த பிரேசிலைச் சுதந்திர நாடாக டொம் பெத்ரோ 1822 இல் பிரகடனம் செய்தார். அதையடுத்து அந்த நாட்டின் முதலாவது சக்கரவர்த்தியாகி 1834 இல் இறந்தார். 35 வயதிலேயே இறந்துவிட்ட அவரது விருப்பப்படி அவரது இருதயம் அதிலிருந்து எடுக்கப்பட்டு போர்ட்டோ நகரின் தேவாலயமொன்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. அவரது உடல் பிரேசிலின் 150 சுதந்திர தினத்தன்று அந்த நாட்டுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அது சௌ பவ்லோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
போர்த்துக்காலின் பிடியிலிருந்து பிரேசிலுக்குச் சுதந்திரம் பெற வழிவகுத்த டொம் பெத்ரோ அங்கே “விடுதலை பெற்றுத்தந்தவர்,” என்று போற்றப்படுகிறார். வரவிருக்கும் 200 வது சுதந்திர தினம் பெரும் விழாகக் கொண்டாடப்படவிருக்கிறது. அதற்காக அவரது இருதயத்தைப் போர்த்துக்கால் மூன்று வாரங்களுக்கு பிரேசிலுக்கு இரவலாகக் கொடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்