ஹைட்ரஜினால் இயங்கும் உலகின் முதலாவது ரயிலை ஜேர்மனியில் ஓடவிடுகிறது பிரெஞ்ச் நிறுவனம்.
உலக காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சூழலை அசுத்தப்படுத்தாத தொழில்நுட்பங்கள் பாவனைக்கு வருகின்றன. அவைகளிலொன்றாக பிரெஞ்ச் நிறுவனமான Alstom ஆல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் இயக்கும் ரயில் ஜேர்மனியில் முதல் தடவையாக இன்று இயக்கப்படுகிறது.
இதுவரை டீசலால் இயங்கும் ரயில் இயந்திரத்தால் இழுக்கப்பட்டு வந்த ஹம்பெர்க் நகரை அடுத்து ஓடும் ரயிலை இன்று முதல் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் இயந்திரம் இழுக்கும். தொடர்ந்தும் ஜேர்மனியின் 20 % ரயில் இயந்திரங்கள் டீசல் மூலம் இயக்கப்படுகின்றன. ஹைட்ரஜனை இயக்கும் சக்தியாகப் பாவிப்பது சூழல் மாசுபடாமலிருக்க உதவுவது மட்டுமன்றி விலயேறிக்கொண்டிருக்கும் டீசல் பாவனையை நிறுத்தவும் ஒரு தேவையாக இருக்கிறது.
Coradia iLint என்றழைக்கப்படுகின்றன குறிப்பிட்ட பிரெஞ்ச் நிறுவனத்தின் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் இயந்திரங்கள். இவை அவ்விரண்டு நாடுகளிலும் சுமார் 80 பேருக்கு வேலைவாய்ப்பையும் கொடுத்திருக்கின்றன. ஜேர்மனியின் சீமன்ஸ் நிறுவனமும் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் இயந்திர மாதிரியைத் தயாரித்துச் சந்தையில் இறங்கவிருக்கிறது. 2035 இல் 15 – 20 % ஐரோப்பிய ரயில்கள் ஹைட்ரஜனால் இயங்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் மட்டும் சுமார் 2,500 – 3,000 ஹைட்ரஜன் ரயில் இயந்திரங்களுக்கான தேவை இருக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பாவிக்கத் திட்டமிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்