படிம எரிபொருட்களுக்கான விளம்பரங்களைத் தடைசெய்யும் முதலாவது நாடாக பிரான்ஸ்.
ஆகஸ்ட் 22 ம் திகதி பிரான்ஸில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத்தின்படி இனிமேல் படிம எரிபொருட்களுக்காக நாட்டில் விளம்பரம் செய்வது தடைசெய்யப்படுகிறது. இயற்கை வாயு போன்றவைகளுக்கான விளம்பரம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் அதே சமயம் பெற்றோல் போன்றவைகளுக்காக விளம்பரம் செய்யலாகாது.
காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு பிரான்ஸ் ஆகும். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்கள் 20,000 – 100,000 எவ்ரோக்கள் தண்டமாகக் கட்டவேண்டியிருக்கும். தொடர்ந்து மீறுகிறவர்களுக்குத் தண்டம் இரட்டிப்பாக்கப்படும். அடுத்த ஜூன் மாதத்தில் இதே நோக்கத்துக்காகச் சட்டங்கள் மீண்டும் மேம்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் பல ஓட்டைகள் இருப்பதாக சூழல் பேணும் அமைப்புக்கள் சுட்டிக்காட்டி, தொடர்ந்தும் படிம எரிபொருட்களை விற்பவர்கள் வெவ்வேறு வகைகளில் விளம்பரம் செய்வார்கள் என்று சாடியிருக்கின்றன.
மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட மக்ரோன் பாராளுமன்றத்தில் பேசியபோது நாட்டில் தற்போது எரிபொருட்களுக்காக மக்களுக்குக் கொடுக்கும் மான்யம் பனிக்காலம் முடியும்போது நிறுத்தப்படும் என்பதைக் குறிப்பிட்டார். அதேபோலவே பணவீக்கத்தை எதிர்கொள்ள மக்களுக்குக் கொடுக்கப்படும் உதவிகளும் நிறுத்தப்படும். அதன் பின்னர், நிஜத்தை மக்கள் எதிர்கொள்ளவேண்டும், காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சாள்ஸ் ஜெ. போமன்